குழந்தைகள் மருத்துவமனையை தரைமட்டமாக்கிய ரஷ்யா... : அதிர்ச்சியில் உக்ரேன்

குழந்தைகள் மருத்துவமனை உட்பட உக்ரேனின் பல்வேறு பகுதிகளில் ரஷியா நடத்திய தாக்குதலில் 36 பேர் உயிரிழந்துள்ளனர்.

உக்ரேன் - ரஷியா இடையேயான போர் இன்று 865 நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த போரில் உக்ரேனுக்கு ஆயுத உதவிகளை அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன.
போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்துவரும் நிலையில் அமைதி பேச்சுவார்த்தைக்கு இரு நாடுகளும் உடன்படாததால் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்நிலையில், உக்ரேனின் பல்வேறு பகுதிகளை குறிவைத்து ரஷியா நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
உக்ரைன் தலைநகர் கீவ், டினிப்ரோ, கிர்வி ரிஹ், சுலோவன்ஸ்க், கர்மட்ரோஸ் உட்பட பல்வேறு பகுதிகளில் நேற்று காலை ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
தலைநகர் கீவ்வில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 171 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இதனிடையே, கீவ் நகர மேயர் தெரிவிக்கையில், ரஷ்யாவின் கண்மூடித்தனமான இந்த தாக்குதலில் 7 சிறார்கள் உட்பட 16 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளனர் என்றும், நாடு முழுவதும் நடந்த தாக்குதலில் சிக்கி 37 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 150 பேர்கள் காயங்களுடன் தப்பியதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவிக்கையில் திங்களன்று மட்டும் 5 நகரங்கள் மீது ரஷ்யா தாக்குதலை முன்னெடுத்துள்ளது என்றார்.

மேலும், அப்பாவி பொதுமக்கள், சிறார்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான அனைத்து குற்றங்களுக்கும் ரஷ்யா பதிலளிக்க வேண்டும் என்றும் ஜெலென்ஸ்கி கோரியுள்ளார். ரஷ்யாவின் இந்த கண்மூடித்தனமான தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.