நாளை பாடசாலைகள் முடங்கும் அபாயம் : விடுக்கப்பட்ட எச்சரிக்கை


கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என ஆசிரியர் – முதன்மைச் சங்கங்கள்  விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

தமது கோரிக்கைகளுக்கு கவனம் செலுத்தப்படாவிட்டால் பாடசாலை நேரத்திலும் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேநேரம் அனைத்து தொழிற்சங்கங்களையும் நாளை கொழும்புக்கு வரவழைத்து எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடவுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், சம்பள முரண்பாடுகளை நீக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தி கடந்த சில நாட்களாக ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள் பல்வேறு தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை, நேற்று நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு முன்பாக எதிர்ப்புப் பிரச்சாரத்திலும் ஈடுபட்டனர்.

இதேபோன்று கடந்த முதலாம் திகதியும் பாடசாலைகளுக்கு முன்பாக கறுப்புக்கொடி மற்றும் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எவ்வாறாயினும், தொழில்சார் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், பெற்றோர்கள் இந்த நிலையை புரிந்து கொள்ள வேண்டும் எனவும்  இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில், ஒழுக்கமின்றி ஒரு நாட்டில் கல்வி கட்டமைப்பு செயற்பாட்டை முன்னெடுக்க முடியாது எனவும் எதிர்காலத்தில் மாணவர்களின் கல்வி செயற்பாடுகளை சீர்குலைக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் கற்றல் செயற்பாடுகளை சீர் குலைப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.