சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) தற்போதைய பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி அநுர அடுத்த சில தினங்களுக்குள் உடனடியாக நாட்டுக்கு விளக்கமளிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
அண்மையில் அத்துருகிரியவில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னளா் ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, ஐஎம்எப் உடன்படிக்கைகள் தமது அரசாங்கத்தின் கீழ் உரிய முறையில் தயாரிக்கப்பட்டதாகத் தெரிவித்த ரணில், வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதே அநுர குமார திஸாநாயக்கவுக்கு (Anura Kumara Dissanayake) எஞ்சியிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஐஎம்எப் அல்லது வேறு ஏதேனும் விடயம் தொடர்பில் முக்கிய தீர்மானத்தை தான் எடுத்திருந்தால் அதனை நாட்டுக்கு அறிவித்திருப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், தற்போது மீண்டும் வரிசைகள் உருவாகிறதா, பணவீக்கம் அதிகரித்து வருகிறதா, ரூபாய் மதிப்பு குறைகிறதா, வட்டி அதிகரிக்கிறதா என்பதையொல்லாம் மக்கள் தெரிந்து கொள்ளவேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் தெரிவித்துள்ளார்.
மேலும், வரவு செலவுத் திட்ட இடைவெளி 1200 பில்லியன், 1300 பில்லியனில் இருந்து 2500 பில்லியனாக அதிகரித்தால், நாட்டுக்கு ஏற்படும் விளைவுகளைச் சொல்லத் தேவையில்லை தெரிவித்த ரணில், உண்மை நிலவரத்தை மறைக்க வேண்டாம் என்றும் தாம் முன்வைத்துள்ள புள்ளிவிபரங்கள் தவறாக இருந்தால் அவற்றை திருத்துமாறும் அநுர குமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.