ரணில் பிணையில் விடுதலையான : முழு விபரம் இதோ




பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

50 இலட்சம் ரூபாய் பெறுமதியிலான மூன்று சரீர பிணையில் இவர் விடுவிக்கபட்டுள்ளார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

சீரற்ற உடல்நிலை காரணமாக,  கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து  ணுழழஅ தொழிநுட்பத்தின் ஊடாக வழக்கு விசாரணைகளுக்கு முன்னாள் ஜனாதிபதி முன்னிலையானார்.

அதன்படி  முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நோய் நிலைமை அதிகரித்துள்ளதால்  உயிராபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அவரை பிணையில் விடுதலை செய்யுமாறும் ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன நீதிமன்றில் கோரிக்கை முன்வைத்தார்.

இதன்போது, குற்றப்புலனாய்வுத் பிரிவிலிருந்து சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் ஆஜரானார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சார்பில் ஜனாதிபதி சட்டதரணிகளான திலக் மாரப்பன, அனுஜ பிரேமரத்ன, உப்புல் ஜயசூரிய மற்றும் அலி சப்ரி ஆகியோர்  ஆஜராகியுள்ளனர்.

இதன்போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தற்போதைய உடல்நிலைமைகள் தொடர்பில் நீதிமன்றில் வெளிப்படுத்திய ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன,

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பாரதூரமான நோய் நிலைமையால் உயிராபத்துள்ளது.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு நோய் நிலைமை வழமைக்கு மாறாக உள்ளதாகவும் அவருக்கு அனைத்து நோய்களும் இருப்பதாகவும் சட்டத்தரணி மன்றில் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, முன்னாள் ஜனாதிபதி கணிசமான காலமாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதயத் திசுக்களின் நெக்ரோசிஸ{ம் நுரையீரல் தொற்றும் இப்போது கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரியவந்தது. மேலும் இதயத்தில் மூன்று அடைப்புக்கள் காணப்படுவதாகவும் நீதிமன்ற கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

எனவே இதனை கருத்தில் கொண்டு ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிணை வழங்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன நீதிமன்றில் குறிப்பிட்டார்.

எனினும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்த அழைப்புக் கடிதத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் இல்லை எனவும், விசாரணை முடியும் வரை அவருக்கு பிணை வழங்கக் கூடாது என்றும் மேலதிக மன்றாடியர் நாயகம் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில்  தெரிவித்தார்.

இதற்கடுத்த வாதப் பிரதிவாதங்களின் அடிப்படையிலேயே முன்னாள் ஜனாதிபதிக்கு பிணை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேநேரம் இந்த வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் 29 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துகொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.


ரனில் விக்கிரமசிங்க, இலங்கையின் வரலாற்றில் கைது செய்யப்பட்ட முதல் முன்னாள் ஜனாதிபதி ஆவார். 2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஜனாதிபதியாக இருந்தபோது, அவர் இங்கிலாந்தில் மேற்கொண்ட பயணத்தின் போது அரச நிதியை தவறாக பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பொலிஸாரின் கூற்றுப்படி, அவர் அமெரிக்காவிற்குச் சென்ற பயணத்தின் ஒரு பகுதியாக லண்டனுக்குச் சென்றபோது, அவரது குழுவினரின் பயணச் செலவுக்காக சுமார் ரூ.16.9 மில்லியன் அரச நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது.