பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை இன்றிலிருந்து ரணில் ராஜபக்ச என்ற பெயரால் அழைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பான ஐக்கிய பெண்கள் சக்தியினர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்திற்கு முன்னால் முன்னெடுத்த போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர், " ஒரு விடயத்தை சொல்ல வேண்டும் நாம் அந்த மனிதரை இன்று முதல் ரணில் விக்ரமசிங்க என்று அழைக்காது ரணில் ராஜபக்ச என்று அழைக்க வேண்டும்.
நாட்டு மக்களுக்கு பாவத்தை வழங்காது, அரசியலை நிறுத்திவிட்டு வீட்டிலிருந்து நெட்பிளிக்ஸ் பார்த்துக் கொண்டு இருக்குமாறு, நாங்கள் ரணில் விக்ரமசிங்கவை கேட்டுக் கொள்கிறோம்.
ரணில் ராஜபக்ச வந்ததால் எந்தவொரு கலந்துரையாடலும் வெற்றியளிக்கவில்லை, எதுவுமே நடக்கவில்லை. அதனால் இவற்றையெல்லாம் ஒருபுறம் வைத்து விட்டு சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்குமாறு நாம் கோருகிறோம்.
ரணில் ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகிய இருவரும் பதவியிலிருந்து விலகிச் செல்ல வேண்டும்" எனக் குறிப்பிட்டார்.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            