நாட்டில் மீண்டும் சிவில் போர் வெடிக்கும் அபாயம் காணப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மக்கள், ரணில் தவிர்ந்த வேறும் வேட்பாளர்களுக்கு வாக்களித்தால் இவ்வாறு சிவில் போர் வெடிக்க வாய்ப்பு உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலி பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இதனைத் தெரிவித்த அவர்,
ஜனாதிபதி தேர்தலுக்காக எவ்வாறான வேட்பாளர்கள் போட்டியிட்டாலும், மக்களுக்கு சேவையாற்றிய தலைவராக ரணில் விக்ரமசிங்க மட்டுமே திகழ்கின்றார்.
தேர்தலில் வெற்றியீட்டும் நோக்கில் ஏனைய வேட்பாளர்கள் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி வருகின்றனர். எனினும் அந்த வாக்குறுதிகள் நடைமுறைக்கு சாத்தியமற்றவையாகும்.
வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்றுக் கொள்வதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
ரணில் விக்ரமசிங்க செய்யக்கூடிய விடயங்களை மட்டுமே எல்லா சந்தர்ப்பங்களிலும் கூறுவார். அது ஒரு தலைவரிடம் இருக்கக்கூடிய உயரிய பண்பாகும் எனவும் வஜிர அபேவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
சிவில் போர் வெடிக்கும் என்ற கருத்தை வஜிர அபேவர்தன பல்வேறு மேடைகளில் தெரிவித்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமாரவின் ஹெல்மெட் கும்பல் நாட்டில் அதிகாரம் பெற்றால் நாட்டில் 2022 ஆம் ஆண்டை விட அதிக இரத்தக்களரி ஏற்படும் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
திவுலபிட்டிய, கட்டான பிரதேசத்தில் நேற்றையதினம்(28) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர்,
இந்த நாட்டை எப்போதும் பின்னோக்கி கொண்டு சென்றது ஜே.வி.பி தான். 2022 ஆம் ஆண்டு வீடுகளுக்கு தீ வைத்து கொடூரத்தை நாட்டில் விதைத்தது அனுரகுமார திஸாநாயக்கவின் தலைக்கவச கும்பல்தான். இவ்வாறானதொரு குழுவிற்கு அதிகாரம் வழங்கப்படுமானால் இந்த நாட்டில் மீண்டும் இரத்தக்களரி ஏற்படும் என்றார்.
இதேநேரம் மக்கள் பிழையான தீர்மானம் எடுத்தால் பங்களாதேஷிற்கு ஏற்பட்டுள்ள நிலையே எமக்கும் ஏற்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர்,
முன்னதாக கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்தால் நாடு நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என நாங்கள் அன்று மக்களுக்கு தெளிவுபடுத்தினோம்.
என்றாலும் மக்கள் எங்களை நம்பாததால் பாரிய நெருக்கடிக்கு முகம்கொடுக்க நேரிட்டது.
அதேபோன்று தற்போதும் ரணில் விக்ரமசிங்கவைத் தவிர வேறு யாருக்கு வாக்களித்தாலும் மீண்டும் சில மாதங்களில் நாட்டை கட்டியெழுப்ப ரணில் விக்ரமசிங்க முன்வரவேண்டி வரும்.
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியுமான தலைவரை தெரிவு செய்வதா? அல்லது புதிய ஒருவரை தெரிவுசெய்து பரீட்சித்துப்பார்ப்பதா? என்பது மக்களின் தீர்மானத்திலேயே உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது எனவும் இதனால் என்னோடு போட்டியிடுகின்ற சக ஜனாதிபதி வேட்பாளர்கள் குழப்பமடைந்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
மூதூரில் நேற்றையதினம்(28) இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இதனைத் தெரிவித்த அவர்,
கடந்த காலங்களில் இனவாதம் பேசியவர்கள் சஜித் அணியிலும், ரணில் அணியிலும் காணப்படுகின்றனர்.எமது அணியில் அப்படி யாரும் இல்லை.நாம் பேசாததை பிரச்சார மேடைகளில் பேசி எம்மை மக்களிடமிருந்து பிரிக்கப் பார்க்கின்றனர்.அது ஒரு போதும் மக்களிடத்தில் எடுபடாது.மக்களுக்கு தெரியும் என்றார்.