உயர் சம்பளம், வரிச் சுமைக் குறைப்பு, அஸ்வெசும, என பல அம்சங்களை உள்ளடக்கிய ரணிலின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியானது

 

  'ரணிலுடன்  நாட்டை வெற்றிகொள்ளும்' ஐந்தாண்டுகள் தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஊடாக வாழ்க்கைச் செலவைக் குறைத்தல், புதிய தொழில்வாய்ப்பு உருவாக்கம், உயர் சம்பளம், வரிச் சுமைக் குறைப்பு, பொருளாதாரத்திற்கான திட்டம் மற்றும் 'உறுமய', 'அஸ்வெசும' வேலைத் திட்டங்களை விரிவுபடுத்தல் ஆகிய விடயங்கள் குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.


ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் 'ரணிலுடன்  நாட்டை வெற்றிகொள்ளும்  ஐந்தாண்டுகள்' என்ற தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்பட்டது.

 
தேரவாத வர்த்தகப் பொருளாதாரம், 2025க்கு அப்பால் செல்லும் செயல்முறை,  ஒளிமயமான சமுதாயத்தை நோக்கி, வெற்றிபெறும் தாய்நாடு , ஒன்றிணைந்த இலங்கை ஆகிய 5 பிரதான விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது.

கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இன்று முற்பகல் 10 மணியளவில் சர்வமத வழிபாடுகளுடன் நிகழ்வுகள் ஆரம்பமானதைத் தொடர்ந்து, தேர்தல் விஞ்ஞாபனத்தைப் பார்வையிடுவதற்கான   www.ranil2024.lk    என்ற இணையதளம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
 
இதன் போது இளைஞர்கள் மற்றும் பெண்களின் மேம்பாடு தொடர்பான பிரத்தியேக திட்டமிடல்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டன.

நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இளைஞர்களை மேடைக்கு அழைத்து அவர்கள் மத்தியிலேயே தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டார்.

 'ரணிலுடன்  நாட்டை வெற்றிகொள்ளும்' ஐந்தாண்டுகள் தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஊடாக வாழ்க்கைச் செலவைக் குறைத்தல், புதிய தொழில்வாய்ப்பு உருவாக்கம், உயர் சம்பளம், வரிச் சுமைக் குறைப்பு, பொருளாதாரத்திற்கான திட்டம் மற்றும் 'உறுமய', 'அஸ்வெசும' வேலைத் திட்டங்களை விரிவுபடுத்தல் ஆகிய விடயங்கள் குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மக்களுக்கான சொத்துரிமையை, முறையாகவும் விரைவாகவும் வழங்கும் வேலைத் திட்டத்தை உறுதிப்படுத்த தனியான அதிகார சபை நிறுவப்படும் என்றும் அதன்மூலம் உறுமய வேலைத் திட்டத்தின் ஊடாக இரண்டு மில்லியன் மக்களுக்கு காணி உரிமையும் கொழும்பு நகரில் அரசாங்கத்திற்கு சொந்தமான குறைந்த வருமானம் பெறுவோருக்கான வீடுகளின் உரிமையும்  4 வருடங்களுக்குள் வழங்கி, நிறைவுசெய்யப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் நடுத்தர மக்களுக்கு வீடுகளை நிர்மாணிக்க சலுகை வீட்டுக் கடன் வழங்குவது, குறைந்த வருமானம் பெறுவோருக்கு அடுக்குமாடி குடியிருப்பு உரிமையைப் பெறும் வசதிகளை ஏற்படுத்துவது, லைன் அறைகளில் வசிக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கு புதிய கிராமங்களை அமைத்து அதற்கான காணி உரிமை வழங்குவது ஆகிய விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
 
ஏழ்மையான சமூகக் குழுக்களை பிரதேச அபிவிருத்தித் திட்டங்களில் நிரந்தரமாக இணைந்துக் கொள்வதாகவும், பிரதேச உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக ஊழியர்களை பயன்படுத்தும் போது அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'மக்கள் பிரிவு' என்ற புதிய எண்ணக்கருவை அறிமுகம் செய்து, அதை பொருளாதாரத்தின் வலுவான பகுதியாக மாற்ற, ஒவ்வொரு பிரஜைக்கும் காணி அல்லது வீட்டு உரிமை பெறும் வாய்ப்பு உருவாக்கப்படும்.
 
அத்துடன், 'தேசிய செல்வ நிதியம்' ஸ்தாபித்தல் மற்றும் கூட்டுறவுத் துறை முழுமையாக மறுசீரமைக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதிச் சபை ஆகியவற்றில் அங்கத்துவம் பெறுவதற்கு பலமான தொழிற்சங்கப் பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என்றும், அந்த நிதியத்தை அரசாங்கப் பணிகளுக்குப் பயன்படுத்துவதை உச்ச அளவில் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் குறிப்பிடப்பட்டுள்ளது.