இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்ட படகுகளின் உரிமையாளர்கள் இராமேஸ்வரத்தில் இருந்து இன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
முன்னதாக, 2021, 2022 காலப்பகுதிகளில் இராமேஸ்வரம் பகுதியிலிருந்து, இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட கடற்றொழிலாளர்களுடன், 12 படகுகள் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்ட 12 கடற்றொழிலாளர்களும், அவர்களது படகுகளுடன், கடந்த 2023 ஆம் ஆண்டு இலங்கை நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
எனினும் விடுவிக்கப்பட்ட படகுகள், இலங்கையிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் குறித்த படகுகளை இலங்கையில் இருந்து மீட்டு செல்ல, தமிழ்நாட்டு மத்திய அரசிடம் அனுமதி கோரியிருந்த நிலையில், அதற்கான உத்தியோகபூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், மரத்தினாலான குறித்த படகுகள் விடுவிக்கப்பட்டு தற்போது 2 வருடங்கள் கடந்துள்ள நிலையில், படகுகளின் நிலைகுறித்து ஆய்வினை மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக படகுகளின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த படகுகளின் உரிமையாளர்கள் 12 பேர், கடல் வழியாக இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
குறித்த 12 பேர் கொண்ட குழு, இன்று யாழ்ப்பாணம் மயிலிட்டித் துறைமுகத்தில் உள்ள படகுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த படகுகள் ஆய்வு செய்யப்பட்ட பின்னர் படகுகளின் நிலை குறித்து மாநில அரசிடம் கலந்தாலோசித்து படகுகளை தமிழகத்திற்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை, அவற்றின் உரிமையாளர்கள் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.