இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் 45 நிமிடங்கள் காரில் உரையாடியது உலக அரங்கில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.
சீனாவின் டியான்ஜின் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் சந்தித்துக் கொண்டனர்.
இருநாட்டு தலைவர்களும் புடின் காரில் சுமார் 45 நிமிடங்கள் உரையாடியவாறு பயணித்துள்ளனர்.
இது இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவை எடுத்துக் காட்டுவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சந்திப்புக்கு பிறகு, தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி
“ஜனாதிபதி புடினும் நானும் எங்கள் இருதரப்பு சந்திப்பு நடைபெறும் இடத்திற்கு ஒன்றாகப் பயணித்தோம். புடின் உடனான உரையாடல் எப்போதும் பயனுள்ளது” என தெரிவித்துள்ளார்.
இது குறித்து புடின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட பதிவில், அவர்கள் வீட்டில் இருப்பது போல் உணர்ந்ததால், இருவருக்கும் இடையிலான உரையாடல் தொடர்ந்ததாக தெரிவித்துள்ளார்.
இரு நாட்டு தலைவர்கள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நேரடி மற்றும் மறைமுக அழுத்தத்திற்கு இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
இதில் குறிப்பாக, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் மற்றும் ஆயுதங்கள் இறக்குமதி செய்வதை கண்டித்து அமெரிக்கா இந்திய பொருட்கள் மீது 50வீத வரி விதித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் புடினுடனான சந்திப்பு குறித்து மற்றுமொரு எக்ஸ் பதிவில் கருத்து வெளியிட்ட நரேந்தி மோடி,
டின்ஜினில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டின் ஓரங்கமாக, ஜனாதிபதி புடினுடன் ஒரு சிறப்பான சந்திப்பு நடைபெற்றது. வர்த்தகம், உரங்கள், விண்வெளி, பாதுகாப்பு மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. உக்ரேன் மோதலை அமைதியான முறையில் தீர்ப்பது உட்பட பிராந்திய மற்றும் உலகளாவிய நிலவரங்கள் குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டன. எங்களின் சிறப்பு மற்றும் தனித்துவமான மூலோபாயக் கூட்டாண்மை, பிராந்திய மற்றும் உலகளாவிய ஸ்திரத்தன்மைக்கு ஒரு முக்கிய தூணாகத் தொடர்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதியின் இந்த சொகுசு காரின் பெயர் அவுரஸ் செனட் என்று அழைக்கப்படுகிறது. அதிநவீன சொகுசு காரான இந்த அவுரஸ் செனட் காரை, விளாடிமிர் புடின் பயன்படுத்தி வருகிறார்.
இந்த கார் ஃபோர்ட்ரஸ் ஆன் வீல்ஸ் என்று அழைக்கப்படுகிறது. அதாவது நகரும் கோட்டை என்று அழைக்கப்பட்டு வருகிறது.
இந்த வகை அதிநவீன சொகுசு காரை ரஷ்யாவைச் சேர்ந்த அவுரஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ரஷ்யாவின் என்ஏஎம்ஐ, சோலர்ஸ் ஜேஎஸ்சி, ஐக்கிய அரபு இராஜியத்தின் டவாசுன் ஹோல்டிங் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த அவுரஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தை நடத்துகின்றன. ரஷ்ய ஜனாதிபதியின் பாதுகாப்புக்காக பல்வேறு சிறப்பு பாதுகாப்பு வசதிகள் இதில் செய்யப்பட்டுள்ளன.
2021இல் அறிமுகம் செய்யப்பட்ட இந்த அவுரஸ் செனட் காரை, விளாடிமிர் புடின் அப்போதிருந்தே பயன்படுத்தி வருகிறார். வெளியே பார்ப்பதற்கு சொகுசு கார் போன்று தோற்றமளிக்கும் இந்த கார், இரும்புக் கோட்டை போன்றது. எதிரிகள் யாராவது தாக்கும்போது அதைத் தடுப்பதற்கான அதிநவீன கருவிகள், வசதிகள், குண்டு துளைக்காத கண்ணாடிகள், ரொக்கெட் துளைக்காத கவச வாகனம் போன்ற சிறப்புகள் இதற்கு உண்டு. இதுபோன்ற காரை அவுரஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தயாரித்து, வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னுக்கு 2024-ம் ஆண்டு வழங்கப்பட்டது.
இதுவரை 120 கார்கள் மாத்திரமே இந்த வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த கார் இலங்கை மதிப்பில் 8.59 கோடி ரூபாவாகும்.