'ரஷ்ய ஜனாதிபதி புடினின் மலத்தை சேகரித்த பாதுகாவலர்கள்…" அமெரிக்காவில் நடந்தது என்ன?




அமெரிக்காவுக்கு விஜயம் செய்த ரஷ்ய ஜனாதிபதியின் விளாடிமிர் புடினின் மலத்தைச் சேகரிக்க அவரது பாதுகாவலர்கள் தனியாக ஒரு சூட்கேஸை வைத்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 3 ஆண்டுகளைக் கடந்து நீடிக்கும் ரஷ்யா-உக்ரேன் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பெரும் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
இதில் முக்கிய அம்சமாக, ரஷ்ய ஜனாதிபதி புடினை அமெரிக்காவின் அலாஸ்காவிற்கு அழைத்து டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
தனது சிறப்பு விமானத்தில் அலாஸ்கா சென்ற புடினுக்கு, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சிவப்பு கம்பள வரவேற்பளித்தார்.
 சந்திப்பு நடைபெற இருந்த இடத்திற்கு இருவரும் ஒரே காரில் உற்சாகமான முகத்துடன் பயணித்தனர்.


இருவரும் தனியே சந்திப்பார்கள் என முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், கடைசிக்கட்டத்தில் இரண்டு தரப்பிலும் தலா 3 அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். மூடிய கதவுகளுக்குப் பின்னால் சுமார் 3 மணிநேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

 இதனைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் புடின் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அவர்களின் பின்னணியில் சமாதானத்தைத் தொடர்தல் என்று எழுதப்பட்டு இருந்தது.
முதலில் புடினைப் பேசுமாறு டிரம்ப் சைகை காட்டினார். அதன்படி, தனது பேச்சைத் தொடங்கிய புதின், டிரம்ப் உடனான சந்திப்பு தாமதமாக நடந்த ஒன்று என்று குறிப்பிட்டார். போர் மூண்டதற்கான முதன்மை பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று புடின் தெரிவித்தார். அதாவது நேட்டோவில் உக்ரேன் இணைவது தொடர்பான பிரச்னைக்கு தீர்வு தேவை என்று புதின் வலியுறுத்தினார்.
 
பின்னர் கருத்து வெளியிட்ட அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், இந்தச் சந்திப்பு ஆக்கப்பூர்வமாக இருந்ததாகக் குறிப்பிட்டார். ஆனால், எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என்று டிரம்ப் தெரிவித்தார். செய்தியாளர்கள் சந்திப்பு நிறைவடைவதற்கு முன்பு, மிக விரைவில் மீண்டும் சந்திப்போம் என்று டிரம்ப் கூறினார்.
அதற்கு, அடுத்த முறை மொஸ்கோவில் என்று புடின் ஆங்கிலத்தில் பதில் அளித்தார். இருவரும் சுமார் 10 நிமிடங்கள் செய்தியாளர்களை சந்தித்த நிலையில், எந்தக் கேள்விகளுக்கும் பதில் அளிக்காமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
பின்னர் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி வழங்கிய ட்ரம்ப், உடன்பாட்டிற்கு உக்ரேன் ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
 
இந்நிலையில், இந்தப் பேச்சுவார்த்தைக்காக அலாஸ்கா வந்த ரஷ்ய ஜனாதிபதி புடினின் மலத்தைச் சேகரிக்க அவரது பாதுகாவலர்கள் தனியாக ஒரு சூட்கேஸை வைத்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
ரஷ்ய  விளாடிமிர் புடின், உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் கூறப்பட்டது. இதனால் அவரது மலத்தைப் பரிசோதனை செய்யலாம் என்ற அச்சத்தில் அவரது பாதுகாவலர்கள் அதனைச் சேகரிக்க தனியாக ஒரு சூட்கேஸை வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நடைமுறையை ஜனாதிபதி புடினின் சிறப்பு பாதுகாப்புப் படை 2017-ஆம் ஆண்டில் இருந்தே பின்பற்றி வருவதும் தெரியவந்துள்ளது.