காஷ்மீரில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக இந்த வாரம் தமது வளாகத்தின் முன் நடைபெற்ற போராட்டங்களுக்கு பதிலளிக்கப் போவதில்லை என்று கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் அப்பாவி மக்களை போராட்டத்தில் பங்கேற்கத் தூண்டியது மற்றும் நிதியுதவி செய்தது யார் என்பது ஒரு இரகசியமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், போராட்டத்தில் பங்கேற்றிய பெரும்பாலான மக்களுக்கு எதற்கு அங்கு வந்தார்கள், ஏன் அங்கே இருந்தார்கள் என்பது கூட தெரியாது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இலங்கையின் அமைதியான மற்றும் சகோதரத்துவ மக்களின் அன்றாட வாழ்க்கையை சீர்குலைக்கும் போராட்டங்களை நடத்துவது உட்பட எந்தவொரு நடவடிக்கையிலும் பாகிஸ்தான் பங்கேற்க விரும்பவில்லை என்று செய்தித் தொடர்பாளர் மேலும் கூறியுள்ளார்.
காஷ்மீரில் பஹல்காம் தாக்குதல் தொடர்பாக புதன்கிழமை மற்றும் நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் முன் நடைபெற்ற போராட்டங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.