“அநுர கோ ஹோம்” : கொழும்பில் வெடித்த போராட்டம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது விவகாரம் தொடர்பில் கொழும்பில் இன்று ஒன்றுதிரண்ட ரணில் ஆதரவாளர்களால் பாரிய எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


இதன்போது, “அநுர கோ ஹோம்”  என்ற கூச்சல்களோடு அங்கு ஒன்று திரண்டுள்ளவர்கள் தங்களது எதிர்ப்பினை வெளியிட்டனர்.


கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவாளர்கள் ஒன்றுகூடியதால் அங்கு பெரும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


இதனையடுத்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.


 இதேநேரம் கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் அதன் சுற்றுப்புறப்  பகுதிகளில் இன்று (26) காலை முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான குழுவினரும் கொழும்பில் ஒன்று திரண்டு எதிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டனர்.

இந்த எதிர்பு நடவடிக்கையின் காரணமாக  கொழும்பின் பல வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து லேக் ஹவுஸ் சுற்றுவட்டம் மற்றும் கொம்பனித்தெரு வரையிலான பல வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

இந்நிலையில் கொழும்பில் எதிர்க்கட்சிகளால் முன்னெடுக்கப்படும் போராட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் தயார் நிலையில் இருக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக கொழும்பின் அனைத்து பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளுக்கும் கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்திருந்தது.

பொது ஒழுங்கை பேணுவும், எந்தவித இடையூறுகளையும் தடுக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏதேனும் வன்முறை சம்பவங்களையோ, சட்ட மீறல்களையோ எதிர்கொள்வதற்காக, உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க உயர் அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அமைதியின்மை ஏற்படுமானால் உடனடி பதிலளிக்க, கலக தடுப்புப் படைகள் மற்றும் மேலதிக பொலிஸ் குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக பாதுகாப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.