பாலியல் தொழிலுக்கு அனுமதி


சொந்த விருப்பத்தின் பேரில் பாலியல் தொழிலில் ஈடுபடும் மேஜரான தனிப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை தவிர்க்க வேண்டும் என ​பொலிஸாருக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை சிந்தாதிரிப்பேட்டைப் பகுதியில் உள்ள மசாஜ் சென்டர் ஒன்றில் பாலியல் தொழில் நடைபெறுவதாக வந்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் சோதனை நடத்தி, அந்த மசாஜ் சென்டரின் உரிமையாளர் உள்ளிட்ட சிலரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட உதயக்குமார் என்பவர் தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி என். சதிஷ்குமார் முன்பாக நடந்தது. அப்போது உதயக்குமார் தரப்பி்ல், இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் தனது பெயர் இல்லை என்றும், அதன்பிறகு சேர்க்கப்பட்ட அறிக்கையில் தனது பெயரை சேர்த்துள்ளதாகவும், பாலியல் தொழிலில் ஈடுபடுவோர் தங்களது சொந்த விருப்பத்தின் பேரில் ஈடுபட்டால் அது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றம் ஆகாது என்றும், பாலியல் விடுதி நடத்துவது மட்டுமே சட்டவிரோதம் என்றும் வாதிடப்பட்டது.

பொஸார் தரப்பில், அந்த மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடைபெற்றதாகவும், அதன் அடிப்படையிலேயே அங்கிருந்தவர்களை கைது செய்து வழக்குப் பதிவு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதி, மனுதாரரின் பெயர் முதல் தகவல் அறிக்கையில் இல்லாத நிலையில், அதன்பிறகு தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில் பெயர் சேர்க்கப்பட்டு இருந்தாலும் அவர் மீதான குற்றச்சாட்டுக்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை, எனக்கூறி வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பாலியல் தொழில் நடைபெறும் விடுதிகளுக்கு சோதனைக்குச் செல்லும் பொலிஸார் அங்குள்ள பாலியல் தொழிலாளர்களை கைது செய்யவோ அல்லது துன்புறுத்தவோ கூடாது. பாலியல் விடுதிகளை நடத்துவதுதான் சட்டவிரோதம். மேஜரான தனிப்பட்ட நபர்கள் தங்களது சொந்த விருப்பத்தின் பேரில் பாலியல் தொழிலி்ல் ஈடுபட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை பொலிஸார் தவிர்க்க வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.