பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிறப்பித்துள்ள அவசர காலச்சட்டமானது சட்டவிரோதமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.இலங்கையில் தற்போது அரசியல் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனை பிரதமர் அலுவலகமும், விமானப்படை தலைமையகமும் உறுதிப்படுத்தியுள்ளது.இந்நிலையில், இன்று காலை பிரதமரின் அலுவலகத்திற்குள் முன்னால் போராட்டக்காரர்கள் குவிந்ததுடன், பிரதமரை பதவி விலகுமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து பொலிஸார் கண்ணீர் புகைத் தாக்குதல்களை மேற்கொண்டதுடன், பிரதமர் மேல் மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்திருந்தார். அதுமாத்திரமன்றி, அவசரகாலச் சட்டமும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.எனினும், பிரதமராக ரணில் விக்ரமசிங்கவினால் அவசர காலச்சட்டத்தினை பிறப்பிக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்னமும் பதவி விலகாத நிலையிலும், பதில் ஜனாதிபதியாக ரணில் செயல்படுவார் என இதுவரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவோ அல்லது சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தனவோ அறிவிக்காத நிலையில், பிரதமரால் அவசர காலச் சட்டத்தினை பிறப்பிக்க முடியாது என்றும், அவ்வாறு பிறப்பித்தால் அது சட்டவிரோதமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            