ஜனாதிபதி தேர்தல் : ரணில் நம்ப முடியாது என்கிறார் டலஸ்

ஜனாதிபதி தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியுள்ள நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு அமைதியாக இருப்பது அதிருப்திக்குரியது என சுதந்திர மக்கள் சபையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள சுதந்திர மக்கள் சபையின் காரியாலயத்தில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர்,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதவி காலம் எதிர்வரும் நவம்பர் மாதம் 19 ஆம் திகதியுடன் நிறைவடையும்.

ஜனாதிபதியின் பதவிக்காலம் நிறைவடைவதற்கு ஒரு மாத காலத்துக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

புதிய ஜனாதிபதி ஒக்டோபர் மாதம் பதவி பிரமாணம் செய்ய வேண்டும்.

ஜனாதிபதி தேர்தல் குறித்து நாட்டின் அரசியலமைப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியமைப்பின் ஊடாக நெருக்கடிகளை ஏற்படுத்துவதில் திறமையானவர்.

மாகாண சபைகள் தேர்தல் மற்றும் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் என்பனவற்றை இல்லாதொழித்ததை போன்று ஜனாதிபதி தேர்தலை நெருக்கடிக்குள்ளாக்க முடியாது.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான பணிகளை முன்னெடுக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எதிர்வரும் மாதங்களில் பொறுப்பாக்கப்படும்.

அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு அமைய ஜனாதிபதி தேர்தலை எப்போது நடத்த வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உண்டு.

ஜனாதிபதி தேர்தல் குறித்து ஜனாதிபதி அலுவலகம் அறிக்கை வெளியிட வேண்டிய அவசியமில்லை என அவர் தெரிவித்தார்.