ரணிலிடமிருந்து பார் லைசன்ஸ் பெற்ற அரசியல்வாதிகள்..! : நீதிமன்றம் எடுத்துள்ள முக்கிய முடிவு


ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் மதுபான வரிச் சட்டத்தை மீறி புதிய மதுபான உரிமங்களை வழங்கி நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது முன்னாள் நிதியமைச்சர் என்ற வகையில் தாக்கல் செய்த இரண்டு மனுக்களை விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் முடிவுசெய்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட ஜூலை 26, 2024 முதல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற செப்டம்பர் 24, 2024 வரை இரண்டு மாதங்களுக்குள் வழங்கப்பட்ட மதுபான உரிமங்கள் தொடர்பான தகவல்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் உயர்நீதிமன்றம் கலால் ஆணையர் நாயகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த மனு நேற்று (03) யசந்த கோடகொட,ஜனக் டி சில்வா மற்றும் ஹிந்த சமயவர்தன ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் கலால் ஆணையர் எம்.ஏ. குணசிறி, மேலதிக கலால் ஆணையர் ஏ.எம்.பி. அரம்பலா, துணை ஆணையர்கள் சி.ஜே.ஏ. வீரக்கொடி, யு.டி.என். ஜெயவீர, நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, இலஞ்ச ஊழல் ஆணையத் தலைவர் உள்ளிட்ட 39 பேர் குறித்த மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட 2024 ஜூலை 26 முதல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற 2024 செப்டம்பர் 21 வரை, கலால் சட்டத்தின் விதிகளை மீறி பிரதிவாதிகள் பல மதுபானசாலை உரிமங்களை வழங்கியுள்ளதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி மனுதாரர்கள் மனுவை விசாரிக்கவும் அனுமதி கோரினர். இதற்கமைய முன்வைக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்ட பின்னர், தொடர்புடைய உத்தரவைப் பிறப்பித்தஉயர் நீதிமன்றம், மனுவை விசாரிக்க முடிவு செய்தது.