நடுவானில் பயங்கரமாக குலுங்கிய விமானம் : காயமடைந்தோருக்கு 25,000 டொலர் இழப்பீடு


லண்டனில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானம் நடுவானில் பயங்கரமாக குலுங்கிய விபத்தில் காயமடைந்தோருக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிர்வாகம் இழப்பீடு அறிவித்துள்ளது.

இது குறித்து சமூக ஊடக பக்கத்தில் பதிவு செய்துள்ள சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிர்வாகம், லேசாக காயமடைந்தோருக்கு 10,000 டொலரை இழப்பீடாக அறிவித்துள்ளது.

மேலும், ஆபத்தான நிலையில் இருப்பவர்களுக்கு முதற்கட்டமாக 25,000 டொலர் இழப்பீடு அளிப்பதாக குறிப்பிட்டுள்ளதுடன், அவர்களின் நிலை அறிந்து பின்னர் உரிய இழப்பீட்டு அளிக்கப்படும் என்றும் உறுதி அலித்துள்ளது.

கடந்த மே மாதம் லண்டனில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மியான்மர் பகுதியில் வைத்து பயங்கரமாக குலுங்கியுள்ளது. இதில் பலர் காயங்களுடன் தப்பிய நிலையில் பிரித்தானிய பயணி ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்தார்.


குறித்த விமானம் உடனடியாக தாய்லாந்துக்கு திருப்பிவிடப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் அந்த விமானம் கட்டுப்பாட்டை இழந்து 4.6 நொடிகளில் 178 அடி கீழே இறங்கியுள்ளது.

இந்த சம்பவத்தில் பலர் காயங்களுடன் தப்பியதை அடுத்து, தாய்லாந்து மருந்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். தற்போது காயமடைந்தவர்களுக்கு இழப்பீட்டு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், மொத்த பயணிகளின் பயணக் கட்டணமும் முழுவதுமாக திருப்பித் தரவும் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மே 20ஆம் திகதி நடந்த இச்சம்பவத்தில் தற்போதும் 20 பயணிகள் காயங்களுடன் சிகிச்சையில் உள்ளனர். தொடர்புடைய விமானத்தில் சம்பவத்தின் போது அவுஸ்திரேலியா, பிரித்தானியா மற்றும் சிங்கப்பூர் பயணிகள் உட்பட 211 பேர்களும் 18 விமான ஊழியர்களும் பயணம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.