இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பாதாளகுழு தலைவர்களால் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மேலும் பல குற்றங்கள் தற்போது அம்பலமாகி வருகின்றன.
கைது செய்யப்பட்ட ஐந்து பேரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் நடத்தப்படுவதாக புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்தனர்.
கெஹெல்பத்தர பத்மே மற்றும் கொமாண்டோ சலிந்து உட்பட கைது செய்யப்பட்ட ஐந்து பேர் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் மேற்கு வடக்கு குற்றப் பிரிவு ஆகியவற்றால் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நதுன் சிந்தக விக்ரமரத்ன எனப்படும் 'ஹரக்கடா'வை நீதிமன்றத்திற்கு அழைத்து வரும் வழியில் ஒரு ஊடகவியலாளர் போன்று நடித்து கொலை செய்ய முயற்சித்தமை தொடர்பான பல உண்மைகளை இந்த விசாரணைகளின் மூலம் கண்டுபிடிக்க முடிந்தது.
இதற்காக பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மற்றும் அதனுடன் தொடர்புடைய இரண்டு நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்,
அத்துடன் துப்பாக்கியில் பொருத்தப்பட்ட கேமராவை கொண்டு சென்ற நபருக்கு ஊடக அடையாள அட்டையை தயாரித்துக் கொடுத்தவர் குறித்தும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
சம்பந்தப்பட்ட அடையாள அட்டை கம்பஹா பஸ்டேவாவின் அறிவுறுத்தலின் பேரில், பெக்கோ சமனின் நண்பர் ஒருவரால் சந்தேக நபர்களுக்கு கிடைக்கச் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த அடையாள அட்டையை தயாரித்த நபர் மற்றும் இடம் தொடர்பாகவும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இதற்கிடையில், இலங்கையில் நடந்த குற்றங்களுக்காக பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கியை வெளிநாட்டில் இருந்து கமாண்டோ சலிந்த அவதானிப்பது போன்ற காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
இது குறித்து நாம் விசாரித்தபோது, சம்பந்தப்பட்ட வீடியோ குறித்து தற்போது விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கிடையில், களுத்துறை மாவட்டத்தில் செயற்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை களுத்துறைப் பிரிவின் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் போதைப்பொருள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் கைது செய்துள்ளனர்.
அந்தப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், களுத்துறை, மிஹிகதவத்த பிரதேசத்தில் வைத்து ஆறு கிராம் ஹெரோயினுடன் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னா சான் என்ற குறித்த சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், இந்த கடத்தலுடன் தொடர்புடைய மற்றொரு சந்தேகநபர் களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெமுனு மாவத்தை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரது வீட்டில் சோதனை நடத்திய போது, ஒரு அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நான்கு கூர்மையான ஆயுதங்களை பொலிஸார் கண்டுபிடித்தனர்.
மேலும், பல்வேறு குற்றங்களுக்காக பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்களின் வருமான அனுமதிப்பத்திரங்கள் மற்றும் காப்புறுதி அட்டைகள் பலவற்றையும் கண்டுபிடித்தனர்.
இந்த வருமான அனுமதிப்பத்திரங்கள் மற்றும் காப்புறுதி அட்டைகள் பிரதேசத்தில் நடைபெறும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்காக பயன்படுத்தப்படும் மோட்டார் சைக்கிள்களுக்காக வழங்கப்பட்டவை என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த இரண்டு சந்தேக நபர்களும் களுத்துறை நவீன் மற்றும் நிபுண மன்னா கும்பலுடன் தொடர்புடைய பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
--