பரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இலங்கை சார்பில் பெண்களுக்கான 100 மீற்றர் பேக்ஸ்ட்ரோக் நீச்சல் போட்டியில் நேற்று பங்கேற்ற கங்கா செனவிரத்ன தமது ஆரம்ப சுற்றுப் போட்டியில் முதல் இடத்தை பெற்றபோதும் அந்தப் போட்டியில் அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தார்.
இந்தப் போட்டியில் செனவிரத்ன 1:04.26 விநாடிகளில் போட்டியை நிறைவு செய்து முதல் இடத்தைப் பிடித்தார். இதில் துர்க்மனிஸ்தானின் ஏ. பிரிமோவா மற்றும் லிபியாவின் எம். அல்முக்தார் ஆகியோர் முறையே இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்தனர்.
எவ்வாறாயினும் போட்டியில் அவர் வெளியிட்ட காலம் ஆரம்ப சுற்றில் 16 நீச்சல் வீராங்கனைகளுக்குள் இடம்பெறத் தவறியமையினால் அவர் பெண்களுக்கான 100 மீற்றர் பேக்ஸ்ட்ரோக் நீச்சல் போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளார். அவர் ஆரம்ப சுற்றில் பங்கேற்ற 36 வீராங்கனைகளில் 30 ஆவது இடத்தையே பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் ஆரம்ப சுற்றில் ஐந்து சுற்றுப் போட்டிகள் இடம்பெற்றன. இதில் சிறந்த காலத்தை அமெரிக்காவின் கதரின் பர்கொப் பெற்றார். அவர் போட்டியை 57.99 விநாடிகளில் நிறைவு செய்தார்.
அதேபோன்று பெண்களுக்கான 100 மீற்றர் பேக்ஸ்ட்ரோக் போட்டியில் உலக சாதனைக்குச் சொந்தக்காரரான அமெரிக்காவின் ஸ்மித் ரேகன் ஆரம்ப சுற்றில் இரண்டாவது சிறந்த காலத்தை பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.