கணேமுல்ல சஞ்சீவ படுகொலையில் பயன்படுத்தப்பட்ட டக்சிகள் குறித்த அறிக்கையை சி.சி.டி.யிடம் சமர்ப்பிக்குமாறு கொழும்பு தலைமை நீதவான் PickMe நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்குள் கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் இஷார செவ்வந்தி, கொலைக்குப் பிறகு தப்பிச் செல்வதற்காகப் PickMe நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனங்களை பயன்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், குறித்த வாகனங்கள் தொடர்பில் ஒக்டோபர் 29ஆம் திகதி கொழும்பு குற்றப்பிரிவுக்கு (CCD) தகவல் அறிக்கையை வழங்குமாறு கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
செவ்வந்தி பயன்படுத்திய டக்சிகள்
இஷாரா செவ்வந்தி, படுகொலை சம்பவத்திற்கு உதவிய பின்னர் தப்பிச் செல்வதற்கு PickMe நிறுவனத்திற்குச் சொந்தமான முச்சக்கர வண்டி உட்பட பல வாகனங்களைப் பயன்படுத்தியதாக கொழும்பு குற்றப்பிரிவிலிருந்து (CCD) நீதிமன்றத்திற்குத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, தலைமை நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இதற்கமைய, இந்த வாகனங்களை வாடகைக்கு எடுத்தவர்கள் யார், வாகன எண்கள் என்ன, அவற்றை ஓட்டிச் சென்றவர்கள் யார் என்பது குறித்த தகவல்களை தொடர்புடைய அறிக்கையில் சேர்க்குமாறு கொழும்பு குற்றப்பிரிவு விடுத்த கோரிக்கையை பரிசீலித்த நீதவான், அந்த நிறுவனத்திற்கு பின்வருமாறு உத்தரவிட்டுள்ளார்.
இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற உத்தரவுகளைக் கோரிய பொலிஸார், இந்த சம்பவம் தொடர்பான தொடர்ச்சியான விசாரணைகளுக்கு இந்தத் தகவல் அவசியம் என்று கூறி, நீதிமன்றத்தில் மேலும் ஒரு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
தொடர்ந்து, கணேமுல்ல படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் குழு ஏற்கனவே கைது செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், அவர்களால் வெளிப்படுத்தப்பட்ட உண்மைகளின் அடிப்படையில் இந்த உத்தரவு கோரப்படுவதாகவும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையிலேயே, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் பலர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாகவும், மற்றொரு குழு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு மேலும் தெரிவித்துள்ளனர்.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            