சாதாரண தரப் பரீட்சைக்கு 7 பாடங்கள் மட்டுமே! : A, B, C, S, F, என்ற பெறுபேற்று முறையிலும் அதிரடி மாற்றம், ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு



2026 முதல் செயல்படுத்தப்பட உள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு விளக்கமளித்துள்ளது.

இதன்படி, வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் அதிபர்கள் உட்பட பல தரப்பினர் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில், கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பாக நேற்று (17) நடைபெற்ற நிகழ்ச்சியில், புதிய பாடத்திட்டங்கள் தொடர்பான உண்மைகளை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெளிவுப்படுத்தியுள்ளது.


கல்வி அமைச்சின் கூற்றுப்படி, 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் தாய்மொழி, ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமயம் ஆகிய பாடங்கள் கட்டாய பாடங்களாக பட்டியலிடப்பட்டுள்ளன, அதே நேரத்தில் தேர்வுப் பாடங்களில் வரலாறு மற்றும் அழகியல் ஆகியவை உள்ளடக்கப்பட்டுள்ளன.

மேலும்  தொழில்நுட்பம், மேலாண்மை, தொழில்முனைவோர், மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல், சுகாதாரம் மற்றும் இயற்பியல் ஆய்வுகள் ஆகிய பாடப் பிரிவுகளின் கீழ் பரந்த அளவிலான பாடங்களிலிருந்து இரண்டு பாடங்களைத் தேர்ந்தெடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் க.பொ.த. சாதாரண தரப்பரீட்சையின் பெறுபேறுகளிலும் மாற்றம் கொண்டு வரப்படும்  எனவும் தற்போது காணப்படும் A, B, C, S, F,என்ற பெறுபேறு முறைக்கு பதிலாக,GPA முறை  அமுலுக்கு வரும் என கூறப்படுகின்றது.  
இவ்வாறானதொரு பின்னணியில், புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு ஆசிரியர் அதிபர்கள் சங்கங்கள் இன்றும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன. 


உத்தேச கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் கல்வி அமைச்சு தொழிற்சங்கங்களுடன் எவ்வித பேச்சுவார்த்தையிலும் ஈடுபடாமல்,மறுசீரமைப்புக்களை அமுல்படுத்த தீர்மானித்துள்ளாhக குற்றஞ்சாட்டுகின்றனர்.

 வரலாற்று மற்றும் அழகியல் கல்வி மீது அக்கறை கொண்டு எவரும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கவில்லை. அரசாங்கத்தை எவ்வகையில் நெருக்கடிக்குள்ளாக்களாம் என்பதை மாத்திரம் முன்னிலைப்படுத்தி செயற்படுகிறார்கள்.நடைமுறைக்கு சாத்தியமான வகையில் கல்வி மறுசீரமைப்புக்களை அமுல்படுத்த வேண்டும்.தொடர்ந்து தாமதித்துக் கொண்டிருக்க முடியாது என கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

தன்னிச்சையான முறையில் கல்வி மறுசீரமைப்பு திட்டத்தை தயாரித்து அதனை பலவந்தமான முறையில் அமுல்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. இது முற்றிலும் தவறானது. தொடர்புடைய தரப்பினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தால் இந்த சிக்கல் ஏற்பட்டிருக்காது என  இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்