வட கொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை தோல்வி!

வட கொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை தோல்வியடைந்துள்ளதாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஏவுதல் இந்த ஆண்டு வடகொரியாவின் ஏழாவது முறை சோதனையாகும். இது விரைவில் அணு ஆயுதத்தை சோதிக்கும் என்ற கவலைகளுக்கு மத்தியில் வருகிறது.இரு கொரியாக்களும் ஏவுகணைகளை வீசி பதற்றத்தை அதிகரித்த ஒரு நாளுக்குப் பிறகு இது வந்துள்ளது.

உள்ளூர் நேரப்படி இன்று (வியாழக்கிழமை) சுமார் 07:40 மணிக்கு வட கொரியா ஒரு நீண்ட தூர ஏவுகணையை ஏவியது. இது சுமார் 760 கிமீ (472 மைல்கள்) பறந்து சுமார் 1,920 கிமீ உயரத்தை எட்டியது. ஆனால், இந்த சோதனை தோல்வியில் முடிவடைந்தது.அத்துடன், வடகொரியா இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாகவும் தென் கொரியாவின் இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த ஏவுகணைகள் இன்று வியாழக்கிழமை காலை ஜப்பான் அரசாங்கத்தை நாட்டின் வடக்கு மற்றும் மத்திய மாகாணங்களான மியாகி, யமகட்டா மற்றும் நிகாட்டாவில் வசிப்பவர்களுக்கு வெளியேற்ற எச்சரிக்கைகளை வெளியிட கட்டாயப்படுத்தியது.