ஆப்கானிஸ்தானில் பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கம் - 1,100ஐ கடந்த பலி எண்ணிக்கை



ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,100ஐ கடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தானில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பரவலான பேரழிவை ஏற்படுத்தியதால் உயிரிழப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

நேற்றுவரை 800 பேர் வரை உயிரிழந்ததாகவும், 2500க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இந்தியா தேவையான நிவாரண உதவிகளை ஆப்கானிஸ்தானுக்கு வழங்கி வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்ததைத் தொடர்ந்து சாத்தியமான அனைத்து மனிதாபிமான உதவிகளையும், நிவாரணங்களையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது என தெரிவித்தார்.

பின்னர் காபூலில் 1000 குடும்பங்களுக்கு கூடாரங்களை இந்தியா வழங்கியதாகவும், காபூலில் இருந்து குனாருக்கு இந்திய தூதரகம் 15 டன் உணவுப் பொருட்களை உடனடியாக அனுப்பியதாகவும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 1,100ஐ கடந்துள்ளதாகவும், 3500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் இன்றைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜலாலாபாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக கணிசமான உயிர் மற்றும் சொத்து இழப்புகள் ஏற்பட்டுள்ளன.

மேலும், பல கிராமங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன என்றும் வீதிகள் சேதமடைந்ததால் பரவலான அச்சம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேநேரம் சூடானில் நேற்று இடம்பெற்ற நிலச்சரிவில் சிக்கி 1000 பேர் உயிரிழந்துள்ளனர்.

மண்ணில் புதையுண்டவர்களின் உடல்களை மீட்க ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச நிறுவனங்கள் உதவுமாறு சூடான் விடுதலை இராணுவம் கோரிக்கை வைத்துள்ளது.

நிலச்சரிவில் வீடுகள் மண்ணில் புதைந்து கிராமமே முற்றிலும் அழிந்து விட்டன. இந்த சம்பவத்தில் ஒருவர் மாத்திரமே உயிர்தப்பியுள்ளார் என சூடான் விடுதலை இயக்கத்தை நடத்தி வரும் அப்டேல்வாஹித் முகமது நூர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே 2023 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில், சுமார் 1,50,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த போரின் காரணமாக பலரும் தங்கள் வீட்டை விட்டு வெளியேறி மலைகளில் தஞ்சமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.