ரணிலுக்கு அடுத்த பட்டியலில் சஜித் : மிக விரைவில் ஆணைக்குழுவில் ஆஜராகுவார் என தகவல்



எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தி தலைவருமான சஜித் பிரேமதாச இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு விசாரணைக்காக அழைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொது நிதியை முறையற்ற வகையில்பயன்படுத்தியுள்ளதாக அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் தொடர்பிலேயே அவர் விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சஜித் பிரேமதாச அமைச்சராக பதவிவகித்த காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்தை அபிவிருத்தி செய்வதற்காக பொது நிதியை முறையற்ற வகையில் பயன்படுத்தியுள்ளதாக தெரிவித்தும் மற்றும்வேறு சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவே தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனை அடிப்படையாகக் கொண்டு, அவர் விரைவில் விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இதுவரையில் அவ்வாறானஅழைப்பு எதுவும் வரவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் தரப்பினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் பொய்யான நடவடிக்கைகள் மூலம் நாட்டு மக்களை ஏமாற்றும் வேலையைச் செய்யக் கூடாது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

வேரஹெர ஸ்ரீ சித்தார்த்தராம புராண ராஜமஹா விஹாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தூபி மனை, கணினி மையத்துடன் கூடிய மூன்று மாடி அறநெறி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் நேற்று வியாழக்கிழமை கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்த  அவர்,

இன்று நாட்டில் பொய்களும் ஏமாற்று வேலைகளுமே நடந்து வருகின்றன. மக்கள் 24 மணி நேரமும் பொய்களால் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

செய்திகளை உருவாக்கி, இல்லாதவற்றை சொல்லி, இருப்பவற்றை அழித்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த ஏமாற்று நடவடிக்கையால் 220 இலட்சம் மக்களே ஏமாற்றப்பட்டு வருகின்றனர். பணம் கொடுத்து, கூலிக்கு ஆட்களை வேலைக்கு அமர்த்தி, பல்வேறு பொய்களைப் பரப்பி பொய்யை கோலோச்சி வருகின்றனர்.
பணம் செலவிட்டு உருவாக்கப்படும் போலிச் செய்திகள் பரவ இடமளிக்கக் கூடாது. ஏமாற்று, பொய் மற்றும் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தல்களை விடுத்து உண்மையான சவாலை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பொய்யான நடவடிக்கைகள் மூலம் நாட்டு மக்களை ஏமாற்றும் வேலையைச் செய்யக் கூடாது என்றார்.