தம்புள்ள அணிக்கு புது உரிமையாளர்; தம்புள்ள சிக்‌ஸர்ஸ் என பெயர் மாற்றம்

இந்த ஆண்டு லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடும் தம்புள்ளை அணியின் புதிய உரிமையாளர் மற்றும் புதிய பெயரை இலங்கை கிரிக்கெட் சபை இன்று (05) அறிவித்துள்ளது.

அதன்படி, 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள LPL போட்டியில் தம்புள்ளை அணி ‘தம்புள்ளை சிக்ஸர்ஸ்‘ என்ற பெயரில் களமிறங்கவுள்ளது.  

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கட்டுமான பொறியியலாளர் ஆலோசனை நிறுவனமான சிகுவோயா கன்சால்டன்ஸ் ஐஎன்சி Sequoia Consultants, Inc தம்புள்ளை அணியின் உரிமையை பெற்றுக் கொண்டுள்ளது.

இலங்கை நாட்டவரான பிரியங்க டி சில்வா இந்த நிறுவனத்தின் தலைவராக உள்ளார் மேலும் அவர் 1983 இல் இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணியை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.

அத்துடன் இலங்கையின் முதல்தரப் போட்டிகளில் ஆடிய அனுபவத்தைக் கொண்ட இவர் தற்போது 60 வயதுக்கு மேற்பட்ட அமெரிக்க தேசிய கிரிக்கெட் அணிக்காக விளையாடி வருகின்றமை விசேட அம்சமாகும்.

தம்புள்ள அணியின் முன்னாள் உரிமையாளர் ஆட்ட நிர்ணயக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நிலையிலேயே அணி உரிமையாளர் மாற்றப்பட்டுள்ளார்.

LPL தொடர் இந்த ஆண்டு ஐந்தாவது முறையாக ஜூலை மாதம் 1ஆம் திகதி தொடக்கம் 21ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.