போர் தொடரும் என மீண்டும் வலியுறுத்தும் நெதன்யாகு: போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு உடன்பட முடியாது என்கிறது ஹமாஸ்


மத்திய காசாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 75 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாலாவில் உள்ள புரேஜ் அகதிகள் முகாமிற்குள் தமது தரைப்படைகள் நுழைந்ததாக இஸ்ரேல் அறிவித்ததுடன் தாக்குதலுக்காக போர் விமானங்கள் மற்றும் பீரங்கிகள் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காஸாவின் பல்வேறு சவக்கிடங்குகள் நிரம்பி வழிவதாகவும் டெய்ர் எல்-பாலாவில் ஏற்பட்ட உயிரிழப்புகளை சமாளிக்க வைத்தியசாலைகள் போராடி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஹமாஸ் அமைப்பு முழுமையாக அழிக்கப்படும் வரை போர் தொடரும் என மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை  நிரந்தர போர்நிறுத்தம் மற்றும் காஸாவிலிருந்து முழுமையாக வெளியேறுவதற்கு இஸ்ரேல் தெளிவான உறுதிமொழியை வழங்காத வரை எந்தவொரு போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கும் உடன்பட முடியாது என ஹமாஸ் தெரிவித்துள்ளதாக அந்த அமைப்பை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 07 திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் மேற்கொண்டதையடுத்து 36,000 இற்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 82,959 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே தெற்கு லெபனானில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் வெள்ளை பொஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இஸ்ரேல் படையினருக்கும் தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது.

இந்த மோதலின் காரணமாக லெபனானில் சுமார் 400 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் அவர்களில் அதிகமானோர் ஹிஸ்புல்லா அமைப்பை சேர்ந்தவர்கள் ஆவர்.

மேலும், இஸ்ரேலின் தாக்குதல்களால் 70 இற்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளதுடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்த நிலையில், தெற்கு லெபனானில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் வெள்ளை பொஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

வெள்ளை பாஸ்பரஸ் குண்டுத் தாக்குதல் என்பது பொதுமக்களுக்கு அதிகம் தீங்கு விளைவிக்கும் என்பதுடன் இது சர்வதேச சட்டத்தை மீறும் ஒரு செயற்பாடாகும்.

அத்துடன் இந்த தாக்குதலால், 173 பேர் வரை பாதிப்படைந்து மருத்துவ சிகிச்சை தேவைகள் ஏற்பட்டுள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும், வெள்ளை பொஸ்பரஸ் குண்டு தாக்குதல் மூலம் பொதுமக்களை குறிவைக்கவில்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.