நாடளாவிய ரீதியில் இன்று ஹர்த்தால் – 2000க்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் ஆதரவு!

அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று (வெள்ளிக்கிழமை) நாடளாவிய ரீதியில், ஹர்த்தால் முன்னெடுக்கப்படுகிறது.

இதற்கு ஒத்துழைப்பு வழங்கி, பல துறைசார் தொழிற்சங்கங்கள் சேவையிலிருந்து விலக தீர்மானித்துள்ளன.

இதேநேரம், இன்றைய ஹர்த்தாலுக்கும் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் கூட்டுப் போராட்டத்துக்கும் பதில் கிடைக்காவிட்டால் மே 11ஆம் திகதி முதல் அரசாங்கம் வீட்டுக்குச் செல்லும் வரை தொடர் வேலை நிறுத்தமும் தொடர் ஹர்த்தாலும் தொடரும் என தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

ஹர்த்தால் போராட்டத்திற்கு 2000க்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் ஆதரவளித்துள்ளதாக தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், பல பொது, அரை பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பொது போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், கடைகள் அடைக்கப்பட்டு சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கங்கள், தொடருந்து, பேருந்து, சுகாதாரம், வங்கி, மின்சாரம், அஞ்சல், துறைமுகம் மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட பல்துறைசார் தொழிற்சங்கங்கள் இன்று இந்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் தொடருந்து திணைக்களத்தின் தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள், இயந்திர சாரதிகள் உள்ளிட்ட பிரதான தொழிற்சங்கங்கள், இந்த நிர்வாக முடக்கலுக்கு ஆதரவளிக்கவில்லை என தொடருந்து போக்குவரத்து அதிகாரி காமினி செனவிரத்ன தெரிவித்தார்.

எனவே, இன்றைய தினத்திற்கான 275 ரயில் சேவைகளையும் முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இன்றைய நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எனினும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் வழமை போல சேவையில் ஈடுபடும் என அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

இதேநேரம், இந்தப் போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் முகமாக நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளுக்கு முன்பாக இன்று மதியம் 12 மணிமுதல் ஒரு மணிவரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

1953ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பாரிய ஹர்த்தாலுக்கு பின்னர் 69 வருடங்களைக் கடந்து இன்று நாடளாவிய ரீதியில் மிகப்பெரிய ஹர்த்தால் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.