மட்டக்களப்பு கடல் பகுதியை ஆக்கிரமித்துள்ள நண்டினம் : இன்னலுக்குள்ளாகியுள்ள கடற்தொழிலாளர்கள்


தொடர்ச்சியாக மட்டக்களப்பு கடற்பகுதியில் அதிகரித்து வரும் ஒரு வகை நண்டினம் காரணமாக கடற்தொழிலார்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார்கள்.

வழமைக்கு மாறாக கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு கடல் பரப்பினை இந்த நண்டினமானது ஆக்கிரமித்திருப்பதாகவும், இவை கடற்தொழிலார்களின் வலைகளை சேதப்படுத்துவதாகவும் வலைகளில் அகப்படும் மீன்களையும் அவை சாப்பிடுவதால் மீனவர்கள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது கிழக்கு மாகாணத்தில் நிலவிவரும் காலநிலை மாற்றங்கள், தொடர் மழை ஆகிய பிரச்சினைகளுக்கு மத்தியில் இந்த நண்டினத்தின் பிரச்சினையும் கடற்தொழிலார்களுக்கு பெரும் சவாலாக உள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த நண்டினம் தொடர்பாக கடந்த சில வாரங்களுக்கு முன்னரும் அறிவிக்கப்பட்டிருந்தது, இருந்த போதும் சம்பந்தப்பட்ட கடற்தொழில் அமைச்சரோ அரசாங்க கடற்தொழில் கூட்டத்தாபணமோ எந்தவித நடவடிக்கையும் இதுவரையில் எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.

குறித்த விடயம் தொடர்பாக கடற்தொழில் அமைச்சர் கடற்தொழிலார்களது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு உதவி செய்ய வேண்டும் என கடற்தொழிலாளர்கள் மேலும் வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளனர்.