எனது திட்டமே பொருளாதார மீட்சிக்கு வழிவகுக்கும்: செயற்படுத்தாவிடின் மீண்டும் நெருக்கடி ஏற்படும் - எச்சரிக்கும் ரணில்


 

பொருளாதார மீட்சிக்காக சிறந்த திட்டத்தை அமுல்படுத்தினேன். அரசியல் பிரபல்யத்துக்காக ஏற்றுக்கொண்ட இணக்கப்பாடுகளை மாற்றியமைத்தால் மீண்டும் நெருக்கடி நிலைமை ஏற்படும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.



கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தனவின் நூல் வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார்.


இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட இறப்பர் - அரிசி ஒப்பந்தம் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வெளிப்படுத்துகிறது.
 

1953 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஏற்பட்ட அரிசி தட்டுப்பாட்டை தொடந்தே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.


சீனாவுடன் முதலாவதாக வர்த்தக ரீதியிலான ஒப்பந்தத்தை கைச்சாத்திட்ட நாடாக இலங்கை காணப்படுகிறது. இதனைத் தொடர்ந்தே இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு பலமடைந்தது.
 

குறுகிய காலத்தில் பொருளாதார மீட்சிக்கான சிறந்த திட்டங்களை அமுல்படுத்தியுள்ளேன். இந்த திட்டங்களை சிறந்த முறையில் அரசாங்கம் செயற்படுத்தினால் நிலையான முன்னேற்றத்தை அடைய முடியும்.
 

அரசியல் பிரபல்யத்துக்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளை மாற்றியமைத்தால் மீண்டும் நெருக்கடி நிலைமை ஏற்படும் என அவர் தெரிவித்தார்.