கஹவத்தை இளைஞன் படுகொலை : டுபாயில் உள்ள அமில வீட்டை சுற்றிவளைத்த மக்கள், வாகனங்களுக்கு தீ வைப்பு



கஹவத்தை பகுதியில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த தினம், நான்கு பேர் கொண்ட குழு ஒன்று வீட்டில் இருந்த இரண்டு இளைஞர்களை கடத்திச் சென்றதாகவும், பின்னர் அவர்களை பாழடைந்த பகுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்று துப்பாக்கியால் சுட்டதாகவும் தெரியவந்துள்ளது.

இதில், 22 வயது இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்த இளைஞரின் இறுதிச் சடங்குகள் நேற்று (04) மாலை நடைபெற்ற நிலையில், அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

இதன்போது, நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸார் முயற்சித்தபோது, கிராமவாசிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் கண்ணீர் புகைப் பிரயோகத்தையும் மேற்கொண்டனர்.

பகுதியில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக 30க்கும் மேற்பட்ட பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படை (ளுவுகு) அதிகாரிகள் பாதுகாப்பு பணிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், இந்தப் படுகொலை தொடர்பாக டுபாயில் உள்ள அமில என்ற நபருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டுள்ள நிலையில், அவரது வீட்டிற்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், நேற்று (03) கிராமவாசிகளால் அமிலவின் வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றும் மற்றும் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு மோட்டார் சைக்கிளும் எரித்து அழிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக நான்கு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

சிசிடிவி காட்சிகள் மற்றும் தொலைபேசி பதிவுகள் உள்ளிட்ட பல தகவல்களை ஆய்வு செய்து, சம்பவத்துடன் தொடர்புடைய தகவல்களை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

மேலும், இது தொடர்பாக இரண்டு நபர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.