இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிப்பொறிமுறையை நோக்கி நகர்த்திச்செல்லுங்கள் : பிரிட்டன் பிரதமரிடம் கோரிக்கை


இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிப்பொறிமுறையை நோக்கி நகர்த்திச்செல்வதற்கு அவசியமான நடவடிக்கைளை பிரிட்டன் முன்னெடுக்க வேண்டும் என அந்நாட்டின் புதிய பிரதமராகத் தெரிவாகியிருக்கும் கெய்ர் ஸ்டார்மரிடம் பிரித்தானியத் தமிழர் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.

 புதிய பிரதமராகத் தெரிவாகியிருக்கும் கெய்ர் ஸ்டார்மருக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்திருக்கும் பிரித்தானியத் தமிழர் பேரவை  

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான இணையனுசரணை நாடுகளில் பிரிட்டன் மிகமுக்கிய பங்காளி என்ற ரீதியில், இலங்கை தொடர்பில் ஏற்கனவே கொண்டுவரப்பட்ட தீர்மானம் மேலும் இருவருடங்களுக்கு நீடிக்கப்படுவதைத் தடுப்பதற்கு அவசியமான செயற்திறன்மிக்க நடவடிக்கைகளை பிரிட்டன் முன்னெடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம்.
 
மாறாக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிப்பொறிமுறை ஒன்றை நோக்கிக் கொண்டுசெல்வதற்குத் தூண்டுதல் வழங்குமாறும் வலியுறுத்துகின்றோம்.

அதேபோன்று இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிப்பொறிமுறையை நோக்கிக் கொண்டுசெல்லும் அதேவேளை, போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக பிரிட்டனில் நடைமுறையில் உள்ள உலகளாவிய மனித உரிமைகள்சார் தடைகள் சட்டம் போன்ற சகல விதமான தடைகளையும் விதிப்பதற்குப் பின்நிற்கக்கூடாது.
மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டோருக்கு எதிராக அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகள் சொத்து மற்றும் பயணத்தடைகளை விதித்துள்ளன.
 
எனவே உலகளாவிய மனித உரிமைகள் கடப்பாட்டுக்கு அமைவாக அமெரிக்கா மற்றும் கனடாவைப் பின்பற்றி பிரிட்டனும் போர்க்குற்றவாளிகளுக்கு எதிராகத் தடைகளை விதிக்க முன்வரவேண்டும் என்று அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.