அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவுக்கு நெருக்கடிகளை அளிப்பதுடன் பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டி வருகிறார். இதன் பின்னணியை அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகனின் முன்னாள் உயரதிகாரி மைக்கல் ருபின் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார்
உலகிலேயே ட்ரம்ப் அதிக வரி விதித்த 2 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால், இந்தியாவுக்கு ட்ரம்ப் 50 வீத வரியை விதித்ததை பல அமெரிக்கர்கள் விரும்பவில்லை என்பதும் ஆய்வில் தெரியவந்திருக்கிறது.
DEMOCRACY INSTITUTE என்ற அமைப்பு நடத்திய இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 53வீதமானோர் ட்ரம்ப்பின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 47வீதமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி ட்ரம்புக்கு எதிராகவும் இந்தியாவுக்கு ஆதரவாகவும் முடிவுகள் வந்துள்ளது ஆச்சரியம் தருவதாக அந்த அமைப்பின் இயக்குநர் PATRICK BASHAM தெரிவித்துள்ளார்.
உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் ஆதிக்கம் பெருகுவதை 64வீதமானோர் வரவேற்றுள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது
ஆனால், அமெரிக்க மக்களில் பெரும்பாலானோர் இந்தியாவிற்கு ஆதரவளித்தாலும் அந்நாட்டின் அரசு பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டுகிறது. மிகவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், டொனால்ட் ட்ரம்ப் பாகிஸ்தானுடன் அதிக நெருக்கம் காட்டி வருகிறார்.
இது அமெரிக்காவின் போக்கில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றமாக உள்ளது. ட்ரம்ப்பின் இந்த போக்கை, பென்டகனின் முன்னாள் உயரதிகாரி மைக்கல் ருபின் கடுமையாக சாடியுள்ளார்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,
ட்ரம்ப் உண்மையில் ஒரு வியாபாரி, ரியல் எஸ்டேட் தரகர். குதிரை பந்தயத்தில் ஈடுபடுவதை போல செயற்படுகின்றார். அவரது செயற்பாடுகளில் ஒழுக்கம் எதுவும் இருக்காது. கொள்கை என்பதெல்லாம் அவரிடம் கிடையவே கிடையாது.
இந்தியா மீதான அவரது நடவடிக்கைகளுக்கு தங்கள் நாட்டின் வணிக நலன், பிரிக்ஸ் அமைப்பின் மீதான கோபம் மட்டுமே காரணம் அல்ல. எப்பாடுபட்டாவது நோபல் பரிசை வெல்லவேண்டும் என்பதே ட்ரம்ப்பின் பெருவிருப்பம்
தான் ஒபாமாவை விட, ஜிம்மி கார்ட்டரை விட, கிளின்டனை விட மேலானவன் என உலகிற்கு காட்ட அவர் விரும்புகின்றார்.
ஆனால் பாகிஸ்தானுடனான போர் நிறுத்த விவகாரத்தில் தனது தலையீட்டுக்கு இந்தியா பிடி இனக்கம் தெரிவிக்காமையானது அவருக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது. இதற்காகவே இந்தியா மீது அவர் அதிக வரி விதித்துள்ளார்.
இந்தியா, பாகிஸ்தான் பிரச்சினையை தீர்க்க ட்ரம்ப் விரும்பினாலும் இவ்விவகாரத்தில் அவரது பார்வையே தவறாக உள்ளது.
பாகிஸ்தானுடனும் ஆசிம் முனிருனுடனும் எவ்வளவு நெருக்கம் காட்டினாலும் அவர்கள் சித்தாந்தங்களை மாற்றவே முடியாது.
ஆசிம் முனிர், சீருடையில் உள்ள ஒசாமா பின் லேடன் ஆவார். பாகிஸ்தான் ஒரு தோல்வியடைந்த நாடு. முனிரின் அணு ஆயுத பயன்பாடு குறித்த பேச்சை அமெரிக்கா கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் என்று அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகனின் முன்னாள் உயரதிகாரி மைக்கல் ருபின் தெரிவித்துள்ளார்.