மஹிந்தவின் கருத்து கட்சிக்குள் பாரிய குழுப்பம் : கட்சித்தாவவுள்ள சஜித்தின் எம்.பி.க்கள்

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தற்போது கட்சிக்குள் பிளவுகள் ஏற்பட்டுள்ளதாக தகவலறிந்த அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன சார்பில் எந்தவொரு வேட்பாளரும் களமிறங்கப் போவதில்லை என கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ச அண்மையில் தெரிவித்ததையடுத்து, இவ்வாறு கட்சிக்குள் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக மொட்டு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க அண்மையில் தெரிவித்திருந்தார்.

அத்துடன், தனது கட்சி சார்பில் எந்தவொரு வேட்பாளரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க போவதில்லை என அந்த கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட வேண்டுமென்பது சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிகளவான உறுப்பினர்களின் விருப்பம் என அந்த கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கட்சிக்குள் குழப்பநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேநேரம் சஜித் பிரதேமதாஸவின் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நான்கு எம்.பி.க்கள் அரசாங்கத்தில் இணையவுள்ளதாக உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி எதிர்வரும் சில வாரங்களுக்குள் இந்த நான்கு பேரும் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதோடு அவர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.