யாழில் களமிறங்கும் கே.வி.தவராசா தலைமையிலான அணி

யாழில் இன்று ஜனநாயகத் தமிழரசுக் கூட்டமைப்பு வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளதாக அதன் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா (KV Thavarasha) தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (Ilankai Tamil Arasu Kachchi) வேட்பாளர் பட்டியலால் அதிருப்தியடைந்த குழுவால் ஜனநாயகத் தமிழரசுக் கூட்டமைப்பு எனும் பெயரில் புதிதாக உருவாக்கப்பட்ட கட்சி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் (jaffna) தேர்தல் மாவட்டத்தில் சுயேச்சைக் குழுவாகப் போட்டியிடவுள்ளது.

தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் பட்டியல் 

ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தலைமையில் இந்தச் சுயேச்சைக் குழுவுக்கான வேட்பாளர்கள் வேட்புமனுவில் நேற்று வியாழக்கிழமை மாலை கையொப்பமிட்டுள்ளனர்.

இதில் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், முன்னாள் கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் த.ஐங்கரன், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஜங்கரநேசன், தமிழரசுக் கட்சியின் மகளிர் அணி செயலாளர் விமலேஸ்வரி, முன்னாள் போராளி வைத்திலிங்கம் பாலசுரேஷ் உள்ளிட்ட 9 பேர் கையொப்பமிட்டனர்.

இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் ஜனநாயகத் தமிழரசுக் கூட்டமைப்பினர் வேட்புமனுவைத் தாக்கல் செய்யவுள்ளனர் என்று அதன் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.