பிரித்தானிய மன்னர் சார்லஸ் (Charles III) மற்றும் ராணி கமிலா ஆகியோர் அவுஸ்திரேலியா தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பைபிளில், சார்லஸும் கமிலாவும் கையெழுத்திட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரித்தானிய மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமீலா ஆகியோர் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கடந்த 19 ஆம் திகதி சென்றுள்ளனர்.
அவுஸ்திரேலியாவுக்கு (Australia) விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய ( UK) மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோருக்கு சிட்னியில் அமோக வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.
ஒரு நாள் ஓய்வுக்கு பிறகு தனது சுற்றுப்பயணத்தை நேற்றையதினம் (20) ஆரம்பித்துள்ள மன்னர் சார்லஸ் வடக்கு சிட்னியின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள தேவாலயத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
சிட்னியின் செயின்ட் தோமஸ் தேவாலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்ட இருவருக்கும் பெருந்திரளான மக்களால் இவ்வாறு வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
தேவாலயத்திற்கு வந்த மன்னர் சார்லஸ், முதல் கடல் பயணத்தின் போது கொண்டு வரப்பட்ட வரலாற்று பைபிளில் மன்னர் சார்லஸ் ராணி கமிலாவுடன் இணைந்து கையெழுத்திட்டுள்ளார்.
மன்னர் சார்லஸ் இந்த பைபிளில் கையெழுத்திடுவது முதல் முறையல்ல, 1983ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சுற்றுப்பயணத்தின் போது சார்லஸ் இளவரசி டயானாவுடன் கையெழுத்திட்டுள்ளார்.
மன்னர் சார்லஸ், ராணி கமீலா, இளவரசி டயானா ஆகியோரை தவிர இளவரசர் ஆண்ட்ரூ, சாரா பெர்குசன், இளவரசர் வில்லியம் மற்றும் வேல்ஸ் இளவரசி ஆகிய பிறகு அரச குடும்ப உறுப்பினர்களும் பைபிளில் கையெழுத்திட்டுள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் குடியரசுவாதத்திற்கு எதிரான கருத்துக்கள் வெளியாகிவரும் இந்த சந்தர்ப்பத்தில் மன்னர் சார்லஸின் இந்த விஜயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.