'ஈஸ்டர் தாக்குதலுக்கு பணம் வழங்கிய ஜே.வி.பியின் முக்கிய உறுப்பினர் : காணாமல் போன துப்பாக்கி சஹ்ரானில் வீட்டில் " வலுக்கும் சந்தேகம்

2015ஆம் ஆண்டில் ஜே.வி.பி தேசிய பட்டியலில் இருந்த இப்ராஹிமே ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு நிதியளித்ததாக மொட்டு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் நேற்றைய(09.07.2025) அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர்,
 
“ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணையை கையாளும் இரண்டு அதிகாரிகளும் தாக்குதல் நடக்க முன்னர் வந்த 90 முன்னறிவிப்புகளை புறக்கணித்தவர்கள் ஆவர்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்ட ஆணையம் இந்த இரண்டு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்துள்ளது.

தற்போது பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும், உளவுத்துறைத் தலைவராகவும் இருக்கும் இந்த இரண்டு அதிகாரிகளில் ஒருவர், பெலவத்தையில் உள்ள ஜே.வி.பி தலைமையகத்திற்குள் நுழைந்து பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்தினார்” எனத் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் இங்கு உரையாற்றிய சாணக்கியன் எம்.பி.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் அரசாங்கம் அரசாங்கத்தை விசாரிப்பது கடினமான விடயம் என்று இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி கூறியிருந்தார். அரசாங்கம் இதனுடன் தொடர்புபட்டுள்ளது என்று ஜனாதிபதியே கூறியுள்ளார். இதனால் அதன் பின்னணி தொடர்பில் கூற வேண்டியுள்ளது.

 இராணுவ புலனாய்வு பிரிவினரால் கிழக்கில் குழுக்கள் அமைக்கப்பட்டன. ஏறாவூரில் 17 பேர், காத்தான்குடியில் 17 பேர், வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடியில் 63 என்று குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த குழுக்களின் தலைவர்களாக சாமாட், பாயீஸ் மற்றும் கலீல் என்பவர்கள் இந்தக் குழுக்களுக்கு தலைமைதாங்கினர். இந்த குழுக்களின் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டிருந்தன. பொலிஸில் இணைந்திருந்த இவர்களில் ஒருவரின் துப்பாக்கியொன்று 2008இல் காணாமல் போயிருந்தன.

அந்தத் துப்பாக்கியே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காலத்தில் சாய்ந்தமருது பகுதியில் ரில்வான் குழு நடந்த தாக்குதலின் பின்னர் மீட்கப்பட்டது. இதேவேளை நியாஸ் என்பவரின் மரணம் தொடர்பிலும் சந்தேகங்கள் எழுகின்றன. இதேவேளை பிள்ளையான்,இனிய பாரதியின் கைது தொடர்பில் நாங்கள் இந்த அரசாங்கத்தை வரவேற்கின்றோம். பிள்ளையானே தாக்குதலின் பிரதான சூத்திரதாரி என்று கூறினர். இது தொடர்பான விசாரணைகள் தொடர்பில் வெளிப்படுத்த வேண்டும் என்று கோருகின்றோம் என்றார்.