கொழும்பு, மாளிகாவத்தை, ஜும்மா மஸ்ஜிட் வீதியில் நேற்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாளிகாவத்தை, ஜும்மா மஸ்ஜிட் வீதிக்கு நேற்றைய தினத் காலை 11.20 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் முச்சக்கரவண்டிகளை பழுதுபார்க்கும் நிலையம் ஒன்றில் இருந்த இளைஞனை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இளைஞன் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வத்தளை, மாபோல பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞனே காயமடைந்துள்ளார்.
இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் ரி- 56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்துடன், முச்சக்கரவண்டிகளை பழுதுபார்க்கும் நிலையத்தின் உரிமையாளர் பாதாள உலக கும்பலின் தலைவரான கஞ்சிபானை இம்ரான் என்று அழைக்கப்படும் மொஹமட் இம்ரான் என்பவரின் நெருங்கிய நண்பர் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கஞ்சிபானை இம்ரான் என்பவரை பழிவாங்கும் நோக்கத்தில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.