கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி , விழுப்புரம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 34 பேர் இன்று காலை வரை உயிரிழந்திருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. அடுத்தடுத்து பலர் உயிரிழந்து விட்டதாக மருத்துவமனைகளில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 18 பேரும் சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு பேரும் இதில் அடங்குவர். மேலும், கள்ளச்சாராயம் அருந்திய சிலர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம் எஸ் பிரசாந்த் “ இறந்தவர்களின் உடல்கள் உடற்கூராய்வு செய்யப்பட்டு குடும்பங்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. உடற்கூராய்வை விரைவாக செய்வதற்காக பிற மாவட்டங்களில் இருந்து மருத்துவ நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். மேலும் சிகிச்சையில் இருக்கும் நபர்களின் உயிரை காப்பதற்கு திருச்சி சேலம் உள்ளிட்ட அருகில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைகளில் இருந்து உயர் சிறப்பு மருத்துவர்கள் வந்துள்ளனர்” என்று தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல கூடுதல் ஆம்புலன்ஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தமிழக அரசு இந்த விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்துள்ளது. இந்த ஆணையம் தனது விசாரணை அறிக்கையை மூன்று மாதங்களுக்குள் சமர்ப்பிக்கும்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம், பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெறுவோருக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவை இன்று தொடங்கி, ஜூன் 29ம் தேதி வரை நடைபெறவுள்ளது. முதல் நாளான இன்று, வழக்கம் போல், உயிரிழந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதோடு, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சியில் சம்பவத்தால் சட்டப்பேரவை அதிர்ச்சியும் துயரமும் கொள்கிறது என்றார் சபாநாயகர் அப்பாவு.
என்ன நடந்தது?
கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட 7-வது வார்டு கருணாபுரத்தைச் சேர்ந்த 4 பேர் கள்ளச்சாராயம் அருந்தியதால் நேற்று உயிரிழந்ததாக அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்த அவர்கள் அனைவரும் கடந்த திங்கட்கிழமை கள்ளச்சாராயம் அருந்தியதாக உறவினர்கள் கூறினர்.
இந்நிலையில், நேற்று நண்பகல் 12 மணி முதல் கருணாபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் என நான்கு கிராமங்களைச் சேர்ந்த, மது அருந்திய பலரும் அதிக வயிற்றுப்போக்கு, கை கால் மரத்து போதல் போன்ற பிரச்னைகளுக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர தொடங்கினர்.
கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் பகுதியில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு கல்லூரி மருத்துவமனை வரை 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் ஒரே நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களை ஏற்றிக்கொண்டு அரசு மருத்துவமனைக்கு வந்தன. அவர்களை மருத்துவர்கள் உடனடியாக பரிசோதனை செய்து அதிக பாதிப்பு உள்ளவர்களை சேலம், புதுச்சேரி, விழுப்புரம் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
தமிழக அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் நபர்களை நேரில் பார்த்து நலம் விசாரித்தார்கள். தொடர்ந்து உயர் தரமான சிகிச்சை வழங்குமாறு மருத்துவர்களுக்கு அவர்கள் அறிவுறுத்தினர்.