அம்பாறையில் குவிந்துள்ள இஸ்ரேலியர்கள் : மூன்று அடுக்கு பாதுகாப்பு, வீதித் தடையுடன் சோதனைச் சாவடிகள்


அம்பாறை மாவட்டத்தில் அறுகம்பை பகுதிக்குவருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின்
எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

அண்மைக்காலமாக இஸ்ரேல் நாட்டில் இருந்து பொத்துவில் பகுதிக்கு அதிகளவான உல்லாசப்பிரயாணிகள் வருகை தருவதால் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறுபகுதிகளில் முப்படையினர் மற்றும் பொலிஸார் இவ்வாறு பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக ஊறணி பகுதியில் இருந்து பொத்துவில்
நகரப்பகுதி வரை இராணுவம், பொலிஸார் மற்றும் கடற்படையினரின் தற்காலிக வீதி தடையுடன் கூடிய வீதி சோதனை சாவடி அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் முக்கிய சந்திகள், வர்த்தக நிலையங்களில்பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் புலனாய்வாளர்கள் என மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர சந்தேகத்திற்கிடமான வாகனங்கள் மோப்பநாய்களின் உதவியுடன் சோதனை செய்யப்பட்டு வருவதோடு, சில இடங்களில் ட்ரோனின் உதவியுடன்வான் பாதுகாப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கடலலை விளையாட்டில் ஈடுபடுபவர்களையும் பாதுகாப்பதற்கென அரச பாதுகாப்புப் படையினர்கள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக கடும் பாதுகாப்பு கெடுபிடிக்கு மத்தியில் பொதுமக்கள் தமது அன்றாட நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.