இஸ்ரேலிய பணயக்கைதிகள் விவகாரம் : ஹமாஸ் படைகள் கூறிய விளக்கத்தால் கோபத்தில் நெதன்யாகு


அமெரிக்கா முன்னெடுத்த சமாதான ஒப்பந்தத்தின் அடிப்படையில், மேலும் இரண்டு பணயக்கைதிகளின் உடல்களை ஒப்படைத்துள்ள ஹமாஸ், எஞ்சிய உடல்களை மீட்க முடியவில்லை என கைவிரித்துள்ளது.

மொத்தமாக உருக்குலைந்துள்ள காஸாவின் இடிபாடுகளில் இருந்து எஞ்சியுள்ள உடல்களை மீட்க நேரமும் சிறப்பு உபகரணங்களும் தேவை என்றும் ஹமாஸ் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஹமாஸ் படைகள், அமெரிக்கா முன்வைத்துள்ள ஒப்பந்தத்தில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும், ஆனால் தங்களால் அடைய முடிந்த அனைத்து பணயக்கைதிகளின் உடல்களையும் திருப்பி அனுப்பியதாகவும் குறிப்பிட்டுள்ளது.


இந்த நிலையில், ஹமாஸ் படைகள் ஒப்பந்தத்தை மீறும் நிலை என்றால், இஸ்ரேலியப் படைகள் காஸாவில் மீண்டும் தாக்குதல் நடத்தக்கூடும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.


இதனிடையே, ஒப்படைக்கப்பட்ட உடலங்களை அடையாளம் காணும் பணிகள் இடம்பெறுவதாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
புதனன்று இரவு ஒப்படைக்கப்பட்ட உடல்கள் பணயக்கைதிகள் என்பது உறுதி செய்யப்பட்டால், மேலும் 19 சடலங்கள் ஹமாஸ் படைகளால் ஒப்படைக்கப்பட வேண்டும்.


ஆனால், தற்போது எஞ்சியுள்ள உடல்களைத் தேடி மீட்டெடுக்க குறிப்பிடத்தக்க முயற்சிகள் மற்றும் சிறப்பு உபகரணங்கள் தேவைப்படுவதாக ஹமாஸ் படைகள் தெரிவித்துள்ளன.


இதனிடையே, பணயக் கைதிகளை திருப்பி அனுப்புவதில் சமரசம் செய்ய மாட்டோம் என்றும் காஸாவில் தங்களின் பணி முழுமையடையவில்லை என்றும் இஸ்ரேல் கூறியுள்ளது.

முன்னதாக செவ்வாயன்று ஹமாஸால் ஒப்படைக்கப்பட்ட நான்கு உடல்களில் ஒன்று காணாமல் போன பணயக்கைதிகளில் ஒருவரல்ல என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.