காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டம் நிறைவு : அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பு


காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டம் நிறைவடைந்துள்ளதாகவும், தற்போது அதன் அடுத்த கட்டத்திற்குள் நுழைவதாகவும் அமெரிக்கா புதன்கிழமை தெரிவித்துள்ளது.

தற்போதைய முன்னுரிமைகளில் மோதலைத் தணித்தல், மனிதாபிமான உதவிகள் காஸாவை அடைவதை உறுதி செய்தல், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டெடுப்பது மற்றும் மறுகட்டமைப்பு தொடங்க அனுமதிக்கும் வகையில் ஒழுங்கை மீட்டெடுப்பது ஆகியவை அடங்கும் என்று அமெரிக்க சிரேஷ்ட ஆலோசகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மத்தியஸ்தம் செய்த ஒப்பந்தத்தின் சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் நிலை குறித்து இரண்டு சிரேஸ்ட அமெரிக்க ஆலோசகர்கள் ஊடகங்களுக்கு விளக்கங்களை வழங்கியுள்ளனர்.

ஆனால், ஹமாஸால் ஒப்படைத்துள்ள இறந்த பணயக்கைதிகளின் எண்ணிக்கை குறித்து இஸ்ரேல் புதன்கிழமை விரக்தியை வெளிப்படுத்தியது, இது போர்நிறுத்தத்திற்கு முன்பு 28 ஆக இருந்ததாகக் கூறப்படுகிறது.

புதன்கிழமை ஹமாஸ் கூடுதலாக இரண்டு உடல்களை ஒப்படைத்தது, இதனையடுத்து இஸ்ரேலின் இறந்த பணயக்கைதிகளின் மொத்த எண்ணிக்கை ஏழு ஆக உயர்ந்துள்ளது, ஆனால் எஞ்சியவர்களின் சடலங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்று ஹமாஸ் கூறியுள்ளது.

இந்த நிலையில் விமர்சனம் குறித்தும், ஹமாஸ் மேலும் பணயக்கைதிகளை திருப்பி அனுப்பத் தவறியதன் மூலம் ஒப்பந்தத்தை மீறியதா என்றும் கேட்டதற்கு, அமெரிக்காவின் சிரேஸ்ட ஆலோசகர்கள் இருவரும் பொறுமையாக இருக்குமாறு வலியுறுத்தினர்.

மட்டுமின்றி, உயிருடன் இருந்த அனைத்து பணயக்கைதிகளையும் ஹமாஸ் விடுவித்துள்ளதால், அவர்கள் ஒப்பந்தங்களை மீறவில்லை என்றும், உடலங்களை மீட்க கால அவகாசம் தேவைப்படும் என்றும் அமெரிக்க ஆலோசகர்களில் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.


இதனிடையே, ஹமாஸிடமிருந்து முரண்பட்ட கருத்து இருந்தபோதிலும், ஆயுதக் குறைப்பு உள்ளிட்ட போர் நிறுத்த விதிமுறைகளுக்கு ஹமாஸ் படைகள் உறுதியாக இருப்பதாக ஆலோசகர்கள் தெரிவித்தனர்.