காசாவின் அல் ஷிபா மருத்துவமனையை இஸ்ரேலிய படை மீண்டும் சுற்றிவளைப்பு


காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல் ஷிபாவில் இஸ்ரேலிய இராணுவம் நேற்று (18) பாரிய சுற்றிவளைப்பு ஒன்றை நடத்தியதோடு இதனால் பெரும் உயிர் சேதங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் கட்டடம் ஒன்றில் தீ பரவியதாகவும் பலஸ்தீன சுகாதார நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த மருத்துவமனையை ஹமாஸ் மூத்த தலைவர்கள் பயன்படுத்துவதாக உளவுத் தகவல் கிடைத்ததை அடுத்து முக்கியம் வாய்ந்த இந்த சுற்றிவளைப்பை நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. மருத்துவமனை வளாகத்துக்குள் படையினர் நுழைந்ததும் சூடு நடத்தப்பட்டதாகவும் இஸ்ரேல் இராணுவம் கூறியது.


இந்த மருத்துவமனையை சூழ டாங்கிகள் நிறுத்தப்பட்டிருப்பதாக அங்கிருப்பவர்கள் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளனர்.

போரினால் இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்காக மக்கள் இந்த மருத்துவமனை வளாகத்தில் அடைக்கலம் பெற்றிருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த நவம்பரில் இந்த மருத்துவமனை வளாத்தில் இஸ்ரேல் நடத்திய சுற்றிவளைப்பு சர்வதேச அளவில் கடும் கண்டனத்திற்கு காரணமானது.

தற்போது முன்னெடுத்துள்ள சுற்றிவளைப்பை கண்டித்திருக்கும் காசாவின் ஹமாஸ் அரச ஊடக அலுவலகம், ‘டாங்கிகள், ஆளில்லா விமானங்கள் மற்றும் ஆயுதங்களுடன் அல் ஷிபா மருத்துவ வளாகத்திற்குள் ஊடுருவியதாகவும் அங்கு சூடு நடத்தியது ஒரு போர் குற்றமாகும்’ என்றும் தெரிவித்துள்ளது.


இதன்போது மருத்துவமனை வளாகத்திற்குள் நடத்திய தாக்குதலில் பல  பேர் கொல்லப்பட்டிருப்பதாக மருத்துவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது.

மருத்துவமனை வளாகத்தின் வாயில் பகுதியில் தீ பரவியதால் அங்கு இடம்பெயர்ந்து இருக்கும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட பலரும் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது. அங்கு சுமார் 30,000 இடம்பெயர்ந்த மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் நிலையில் தொலைத்தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இஸ்ரேலியப் படை விசேட சத்திரசிகிச்சை கட்டிடம் மற்றும் அவசர வரவேற்பு கட்டடத்திற்குள் ஊடுருவி அங்கு நகரும் அனைவர் மீதும் சூடு நடத்தி இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஜன்னல் பகுதியை நெருங்கும் அனைவர் மீதும் இஸ்ரேலிய துருப்புகள் சூடு நடத்தியதால் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கும் மருத்துவ குழுக்களுக்கு முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக வபா குறிப்பிட்டுள்ளது.

இதில் பலர் கொல்லப்பட்டிருப்பதாக மருத்துவமனைக்கு அருகில் இருப்பவர்களிடம் இருந்து தகவல் கிடைத்தது என்று காசா சுகாதார அமைச்சு கூறியது. ‘கடுமையான துப்பாக்கிச் சூடு மற்றும் பீரங்கி தாக்குதல்கள் காரணமாக யாரையும் மருத்துவமனைக்குள் அழைத்துச் செல்ல முடியாதுள்ளது’ என்று அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


போருக்கு முன்னர் காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையாக இருந்த அல் ஷிபா, வடக்கு காசாவில் பகுதி அளவு மாத்திரம் இயங்கும் ஒரு மருத்துவ பராமரிப்பு நிலையமாக மாறியுள்ளது.