காஸாவின் இரண்டாவது பெரிய நகரை இலக்கு வைத்தது இஸ்ரேல் : தாக்குதலுக்கான அறிவிப்பையும் வெளியிட்டது

காசாவின் இரண்டாவது பெரிய நகரமான கான் யூனிஸின் கிழக்குப் பகுதிகளில் வசிக்கும் பலஸ்தீனியர்களை மனிதாபிமான பகுதிகளுக்கு செல்லுமாறு இஸ்ரேலிய இராணுவம் உத்தரவிட்டுள்ளமை குறித்த பகுதியில் கடும் தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுவதற்கான அறிவிப்பாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

கடந்த காலங்களில் இராணுவ உத்தரவுகள் மக்களை வழிநடத்திய மவாசிக்கு அருகில், இஸ்ரேலின் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வடக்கு மற்றும் தெற்கு காசாவிலும், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலும் தாக்குதல்கள் அதிகம் இடம்பெறுவதுடன் கணிசமான உயிரிழப்புகளும் பதிவாவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை பாலஸ்தீனிய கைதிகள் இஸ்ரேலின் சிறைகளில் சித்திரவதை செய்யப்படுவதாக அல்-ஷிஃபா வைத்தியசாலையின்  இயக்குனர்,தெரிவித்துள்ளார்.

இவர் இஸ்ரேலிய சிறையிலிருந்து ஏழு மாத காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு இதனை அறிவித்துள்ளார்.


இதனிடையே காசாவின் வடக்கே ஷெஜாயா நகரில் இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையின்போது ஹமாஸ் அமைப்பை சேர்ந்த பலர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தெற்கு காசாவின் ரபா நகரில், பீரங்கியை தாக்கி அழிக்கும் ஏவுகணையை வீசிய ஹமாஸ் போராளிகளை இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் வான்வழி தாக்குதல் நடத்தி கொன்றுள்ளனர்.

இதேபோன்று மத்திய காசா பகுதியில் நெட்ஜரீம் என்ற இடத்தில், வீரர்கள் மீது ஏவுகணை வீசி தாக்குதல் நடத்திய  ஹமாஸ் போராளிகளை  ஆளில்லா விமான உதவியுடன் இஸ்ரேலிய வீரர்கள் சுட்டு கொன்றுள்ளதாகவும், இந்த வெவ்வேறு தாக்குதல்களில் மொத்தமாக 20 ஹமாஸ் அமைப்பை சேர்ந்த போராளிகள் படுகொலை செய்யப்பட்டு உள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.