மீண்டும் உக்கிரமடையும் இஸ்ரேல் - ஹமாஸ் போர்! ஐ நா எச்சரிக்கை

ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், தாக்குதல்களால் பாதிக்கப்பட்டு பலியாகும் பலஸ்தீனர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

காசா பகுதியில் கடுமையான குண்டுவீச்சு தாக்குதலும், தரைவழித் தாயாக்குதலும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கான் யூனிஸ் நகரின் மையத்தில் இஸ்ரேல் இராணுவத்தினர் இருப்பதாகவும் தரைவழி தாக்குதலைத் தெற்கு நோக்கி விரிவுப்படுத்தவுள்ளதாகவும் இஸ்ரேல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், தெற்கு நோக்கிய இஸ்ரேலின் தாக்குதல் மிகப்பெரிய அளவிலான மனித இடப்பெயர்வுக்கு வழிவகுக்கும் என ஐ நா எச்சரித்துள்ளது.

கசாவிலிருந்து சுமார் 18.7 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு இடப்பெயர்ந்துள்ள நிலையில் ஏற்கெனவே குறைவாகக் கிடைக்கும் உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ வசதி போன்றவை இந்தத் தாக்குதல் காரணமாக மேலும் பாதிக்கும் எனவும் ஐ நா எச்சரித்துள்ளது.

பலஸ்தீனர்கள் தஞ்சம் அடைந்துள்ள பகுதிகளிலும், காசா முழுவதும் இஸ்ரேலின் குண்டுவீச்சுத் தாக்குதல் கடுமையாக்கப்பட்டுள்ளதாகவும் ஐ நா தெரிவித்துள்ளது.

இந்தப் போரில் இதுவரை பலியான பலஸ்தீனர்களின் எண்ணிக்கை 16,200 எனவும் காயமுற்றோர் எண்ணிக்கை 42 ஆயிரத்துக்கு அதிகமாக உள்ளது எனவும் காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, போர் நிறைவுடைந்ததன் பின்னர் காசாவின் பாதுகாப்புக் கட்டுப்பாடு இஸ்ரேலிடம்தான் இருக்கும் எனக் குறிப்பிட்டது, மறைமுகமாக காசாவை மீண்டும் இஸ்ரேல் ஆக்கிரமிக்கும் திட்டத்தின் வெளிப்பாடாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

கான் யூனிஸ் நகரத் தாக்குதலுக்குப் பிறகு தெய்ர் அல்-பலா நகரத்தை நோக்கி இஸ்ரேல் இராணுவம் முன்னேறி வருகிற நிலையில், 150-க்கும் அதிகமான டாக்கிகளும் கவச உடை அணிந்த காவலர்கள் வாகனங்களில் அந்த வழியில் பயணிப்பதையும் செயற்கைகோள் எடுத்த படங்கள் மூலமாக காண முடிகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரைவழி தாக்குதலின் மூன்றாவது கட்டத்தில் இருக்கும் இஸ்ரேல் வான்வழியிலும் கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக ஐநா மனிதநேய விவகார அலுவலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.