காசாவில் கடும் வான்வழித் தாக்குதல்களை நடத்திய இஸ்ரேல் - பட்டினி மரணங்களும் அதிகரிப்பு



இஸ்ரேலியப் படைகள் காசா நகரத்தை ஆக்கிரமிக்கத் தயாராகி வரும் நிலையில், அங்கு இஸ்ரேலியப் படைகளால் கடுமையான வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
 
ஹமாஸின் சிவில் பாதுகாப்பு நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.

 
ஜெய்டவுன் மற்றும் சப்ராவின் குடியிருப்புப் பகுதிகள், கடந்த மூன்று நாட்களாகக் குண்டுகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளன.
 
அவை பொதுமக்கள் வீடுகளுக்குப் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளன.
 
அதேநேரம், இறந்தவர்களையும் காயமடைந்தவர்களையும் மீட்க முடியவில்லை என்றும் ஹமாஸின் பேச்சாளர் மஹ்மூத் பஸ்ஸல் கூறியுள்ளார்.
 
இதேவேளை கடந்த 24 மணித்தியாலத்தில் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதலில் உணவுக்காக காத்திருந்த 89 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
 
மேலும் 513 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்தோடு காசாவில் பட்டினியால் இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 
இதன் மூலம் பட்டினியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 227 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 
இதற்கிடையில், இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம், அவுஸ்திரேலியா, கனடா மற்றும் ஜப்பான் ஆகியவை தங்கள் கண்களுக்கு முன்பாகப் பஞ்சம் பரவி வருகிறது என்று குறிப்பிட்டுள்ளன.

 எனவே பட்டினி மரணங்களை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த நாடுகள் இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளன.