ரணிலுக்கு ஆதரவு வழங்கிய எம்.பி.க்களுக்கு இப்படி ஒரு சலுகையா? அம்பலப்படுத்திய தயாசிறி


 ஜனாதிபதி தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் மேடையில் பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு துப்பாக்கி அனுமதிப்பத்திரம் மற்றும் 1200 க்கும் மேற்பட்ட மதுபானசாலைகளுக்கான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நேற்று தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர்,

மூன்று இலட்சம் ரூபாவுக்கு மேல் துப்பாக்கிகளை கொள்வனவு செய்வதற்கு துப்பாக்கி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.
“அரகலய” போராட்டத்தின் போது வீடுகள் சேதமடைந்தவர்களுக்கு மூன்று முதல் நான்கு கோடி வரை வழங்கப்பட்டுள்ள என அவர் கூறினார்.

இதேநேரம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்க தமது கட்சி தீர்மானிக்கும் பட்சத்தில் அதற்கு நான் ஆதரவு வழங்குவேன் என  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஊடகவியலாளர் ஒருவர்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்வுக்கு இன்னும் ஆதரவு
  இருக்கின்றதா? என கேள்வியை எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அவர்,

அதற்கு கட்சியே தீர்மானிக்க வேண்டும். நான் இல்லை.
தீர்மானத்தை மாற்ற வேண்டும் என கட்சி கூறினால், அதனையும் செய்வேன் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
 
இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட நெருக்கடியான சூழ்நிலையின் போது இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவை தெரிவு செய்ய மஹிந்த ராஜபக்ச எடுத்த தீர்மானம் சிறந்தது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருப்பவர்கள் மஹிந்த ராஜபக்ஷவிடம் அரசியலை கற்றுக்கொள்ள வேண்டும். அதனைச் செய்யாததாலேயே இந்தத் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதிக்கான ஆதரவு நூறையும் தாண்டிவிட்டது. எதிர்வரும் சில நாட்களில் பாராளுமன்ற பெரும்பான்மையில் 115 விடவும் அதிகமானவர்கள் அவருக்கு ஆதரவளிப்பார்கள். அத்துடன் இன்னும் மேலும் பல அரசியல் கட்சிகள் இணைந்துக்கொள்ளும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த மேலும் தெரிவித்தார்.

இதேநேரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கும் இடையில் மீண்டும் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறி்த்த சந்திப்பானதுஇ கொழும்பு  - விஜேராமவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் நேற்று இரவு 7 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக, இருவருக்கும் இடையிலான இந்தச் சந்திப்பு மூடிய அறைச் சந்திப்பாக அமைந்திருந்தாக கூறப்படுகிறது.

அந்தவகையில், சுமார் 1 மணி நேரம் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை, ரணிலை ஆதரிப்பது தொடர்பாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நிலைப்பாட்டை மாற்றுமாரு முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே அரசாங்கத்தின் பெருந்தொகையான உறுப்பினர்களின் ஆதரவுடன் தேர்தல் வெற்றி நிச்சயம் என்றால் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி பல்வேறு தடைகளை ஏற்படுத்துவது ஏன் என பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

எனவே ஒட்டுமொத்த குழுவும் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக உறுதிப்படுத்த முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தொழிலதிபர் தம்மிக்க பெரேரா நியமிக்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், எதிர்வரும் 7ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்  அறிவிக்கப்படுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேநேரம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் இளம் தமிழர் ஒருவர் பாராளுமன்றத்திற்கு தெரிவாக வேண்டும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அவர் எதிர்காலத்தில் ஜனாதிபதியாக வேண்டும் அல்லது பிரதமராக வேண்டும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.