இதயம் சின்னத்தில் போட்டியிடுகின்றாரா ரணில்..? : நாங்கள் எப்பொழுதும் ரணிலுக்கு எதிரானவர்களே என்கிறார் நாமல்


 எதிர்வரும் செப்டம்பர் மாதம்  ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தெற்கு அரசியல் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தேர்தலை அறிவித்தவுடனேயே கட்டுப் பணத்தை செலுத்தித் தனது பெயரை பட்டியலில் முதலாவதாக ரணில் விக்கிரமசிங்க இணைத்துக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் இன்றைய தினம்  ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் தேர்தலுக்கான கட்டுப் பணத்தை செலுத்தியுள்ளார்.
குறிப்பாக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடுவதாக அறிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 'இதயம்' சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக நம்பதகுந்த அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மக்களின் உணர்வுபூர்வமான விடயங்களை முன்னிலைப்படுத்தி “இதயம்“ சின்னத்தை பிரநிதிதித்துவப்படுத்தி அவர் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 92 உறுப்பினர்கள் நேற்று ஏகமனதாக தீர்மானித்துள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில், பிரதமர் தினேஷ் குணவர்தனவின் பங்களிப்புடன், ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற ஆளும் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில், எம்.பி.க்கள் இந்த இணக்கத்தை வெளிப்படுத்தினர்.

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனியாக களமிறங்க தீர்மானித்துள்ள நிலையில் அதனை மீறி ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளனர்.

இதேவேளை  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் இன்று அறிவிக்கப்படவிருந்த நிலையில், கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை காரணமாக அது மேலும் சில நாட்கள் தாமதமாகியுள்ளது.

கட்சியிலிருந்து விலகிச் செல்லும் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களுக்குப் பதிலாக புதிய அமைப்பாளர்களை நியமிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது.

அது மாத்திரமன்றி, ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தவறினால் அது பொதுஜன பெரமுனவின் அழிவிற்கு வழிவகுக்கும் என ரணிலுக்கு ஆதரவு தெரிவித்துள்ள எம்பிக்கள் மஹிந்த அணியினரை எச்சரித்துள்ளனர்.

இதேநேரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்றையதினம்(30) விஜேராம பகுதியில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் இதுவரையில் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தப்படவில்லை.

 இதற்கிடையில் நாங்கள் அன்றும் ஐக்கிய தேசியக் கட்சியிற்கு எதிராகவே இருந்தோம் இன்றும் அவ்வாறே இத் தேர்தலில்  இருப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 இந்நிலையில் நாட்டை கட்டியெழுப்ப முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எடுத்த சரியான தீர்மானத்திற்கு தான் நன்றி தெரிவிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டு நாடு பாரிய அரசியல் மற்றும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்த போது, நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பை தாம் மட்டும் ஏற்கவில்லை.

நாட்டை நேசிக்கும் திறமையான குழுவினரே தன்னுடன் இணைந்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அவர்கள் தமது பொறுப்பை சரியாக நிறைவேற்றியதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அந்த குழுவினால் மட்டுமே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என நாட்டு மக்கள் தற்போது நம்புவதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

--