ஈஸ்டர் தாக்குதல் பின்னணியில் மோடி மோடியின் பாதுகாப்பு ஆலோசகரா.. ? அதிர்ச்சி தகவலை வெளியிட்ட எம்.பி.

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்களின் பின்னணியில் இந்திய பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால்  செயற்பட்டுள்ளார் என்ற சர்ச்சைக்குரிய கருத்தின் உண்மை தன்மை என்ன,இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதா? என  பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரசன்ச கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் நேற்று  இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர்,

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் பின்னணியின் உண்மை இதுவரை கண்டுப்பிடிக்கப்படவில்லை. இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்திலும் இடம்பெறாது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் வழங்கப்படவில்லை.

குண்டுத்தாக்குதல் தொடர்பான விவாதம் இடம்பெறும் போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமரும் தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க சபைக்கு வருகை தராமல் இருப்பது கவலைக்குரியது.

 பிரதான சூத்திரதாரி யார் என்று அனைவரும் கேட்கிறார்கள். ஆனால் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதான சூத்திரதாரியை தான் அறிவதாக குறிப்பிட்டுக் கொண்டு  குற்றப்புலனாய்வு  திணைக்களத்துக்கும்,நீதிமன்றத்துக்கும் இரகசிய வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி தொடர்பில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் யுடியுப் வலைத்தளத்தில் நேர்காணல் ஒன்று வழங்கியுள்ளார்.இந்த தாக்குதலின் பின்னணியில்  இந்திய பிரதமரின்  பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவால் உள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே இதன் உண்மை என்னவென்பதை ஆராய வேண்டும்.

 உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்ட மறு நாளன்று அதாவது 2019.04.22 ஆம் திகதி இந்தியாவில் கோவா பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கையில் வாழும் கத்தோலிக்கர்களுக்கு ஏற்பட்ட நிலையை இந்தியாவில் உள்ள கத்தோலிக்கர்களுக்கு நேரிட இடமளிக்க போவதில்லை என்று உத்வேகமாக உரையாற்றினார்.

அக்காலப்பகுதியில் அவரது பிரசாரங்கள் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை முன்னிலைப்படுத்தியதாகவே காணப்பட்டது. இதனால் இந்தியாவில் வாழும் கத்தோலிக்கர்கள் அவருக்கு வாக்களித்தார்கள்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் பெருமளவில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.

கத்தோலிக்கர்கள் செறிவாக வாழும் பகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வெற்றிப் பெற்றார்.

தேர்தலில் வெற்றிப்பெற்ற கோட்டபய ராஜபக்ஷவுக்கு பெருமளவில் வாக்குகள் கிடைக்கப் பெறவில்லை. ஆகவே உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் இந்திய தேர்தலில் தான் மாற்றத்தை ஏற்படுத்தியது என்றார்.

இதேநேரம் இங்கு உரையாற்றிய பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்,

 முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வழங்கிய இரகசிய வாக்குமூலத்தில், இந்நாட்டு பிரஜையோ அல்லது இந்த நாட்டில் இருக்கும் வேறு நாட்டு பிரஜையோ ஏப்ரல் - 21 பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபடவில்லை என தெரிவித்துள்ளார்.

 அத்துடன் விசாரணைகள் நடைபெற்று வருவதால் சில உண்மைகளை வெளியிட முடியாது எனவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.