அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் 8 மாத நகர்வுகள் உலகையே அதிர வைத்துள்ள நிலையில் இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளின் தலைவர்கள் சந்திக்க இருப்பது மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சந்திப்பு, அமெரிக்காவிற்கு எதிரான புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
சீனாவின் டியான்ஜின் நகரில் நடைபெறும் இந்த மாநாட்டில், உலகளாவிய பொருளாதார மாற்றங்களை எதிர்கொள்ளும் திட்டங்கள் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்ற பிறகு எடுத்து வரும் நடவடிக்கைகள் அந்நாட்டு மக்களை மாத்திரமல்லாமல் ஆப்பிரிக்க ஏழைகளில் இருந்து சீனா, இந்தியா போன்ற நாடுகளின் ஏற்றுமதி வரை பல தளங்களிலும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
நாடுகளுக்கு இடையில் நடைபெறும் போர்களிலும் ட்ரம்ப்பின் தலையீடு பேசுபொருளாகியுள்ளது.
இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதியின் அதிரடி நகர்வுகளால் அதிகம் பாதிக்கப்படும் இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளின் தலைவர்கள் சில நாட்களில் சந்திக்க உள்ளனர்.
சீனாவின் டியான்ஜின் நகரில் நடக்க உள்ள ஸ்கோ எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் கூட்டத்திற்கிடையே இச்சந்திப்பு நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாறி வரும் உலக சூழலில் இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் இணைந்து செயல்பட வேணடும் என அண்மையில் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் லாவ்ரோவ் கூறியிருந்தார்.
இந்த மாநாட்டை அமெரிக்காவிற்கு எதிரான உலகளாவிய தளத்தை கட்டமைக்கும் களமாக சீன ஜனாதிபதி உலகிற்கு வெளிப்படுத்துவார் என அந்நாட்டு ஊடகங்கள் கூறியுள்ளன.
குறிப்பாக அமெரிக்க டொலரின் ஆதிக்கத்தை முறியடிக்க இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளை கொண்ட பிரிக்ஸ் அமைப்பு முயற்சிப்பதாக ட்ரம்ப் கருதும் நிலையிலும் அம்மூன்று நாட்டு தலைவர்கள் சந்திப்பு கவனம் பெறுகிறது.