கால்பந்து வீரர்களின் குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் - கண்காணிப்பில் பெருமளவு இராணுவம்


தேசிய கீதத்தை பாடாவிட்டால் ஈரான் கால் பந்து வீரர்களின் குடும்பத்தவர்களை சிறையில் அடைக்கப்போவதாகவும் சித்திரவதை செய்யப்போவதாகவும் ஈரான் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இங்கிலாந்திற்கு எதிரான போட்டியின் போது ஈரான் வீரர்கள் தேசியகீதத்தை பாடமறுத்ததை தொடர்ந்து ஈரானின் இராணுவ அதிகாரிகளை சந்திக்குமாறு வீரர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

எதிர்வரும் போட்டிகளில் தேசிய கீதத்தை பாடாவிட்டால் அல்லது அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டால் வீரர்களின் குடும்பத்தவர்களை சித்திரவதை செய்வோம் வன்முறைக்கு உட்படுத்துவோம் என வீரர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

வேல்சிற்கு எதிரான போட்டியின் போது ஈரான் வீரர்கள் தேசியகீதத்தை பாடியிருந்தனர். ஈரானின் கால்பந்தாட்ட வீரர்களை கண்காணிப்பதற்காக மேலும் பல இராணுவத்தினர் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

வீரர்களிற்கு வேறு அணிவீரர்களை சந்திப்பதற்கோ அல்லது வெளிநாட்டவர்களை சந்திப்பதற்கோ அனுமதி வழங்கப்படவில்லை என கட்டாரில் செயற்படும் ஈரானின் இராணுவத்தினரை கண்காணிக்கும் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

பெருமளவு ஈரான் இராணுவத்தினர் கட்டாரில் தங்கள் அணியின் கால்பந்தாட்ட வீரர்கள் குறித்து தகவல்களை சேகரிக்கின்றனர் அவர்களை கண்காணிக்கின்றனர் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஈரானின் கால்பந்தாட்ட வீரர்களின் குடும்பத்தினருக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்களை தொடர்ந்து ஈரானின் தேசிய அணியின் பயிற்றுவிப்பாளர் ஈரானின் இராணுவ அதிகாரிகளை சந்தித்துள்ளார்.

இங்கிலாந்து போட்டிக்கு முன்னதாக ஈரானின் கால்பந்தாட்ட வீரர்களிற்கு கார்களையும் பெறுமதி மிக்க அன்பளிப்புகளையும் தருவதாக ஈரானிய அதிகாரிகள் வாக்குறுதி அளித்தனர் எனினும் வீரர்கள் தேசியகீதத்தை பாடமறுத்த அவமானத்தின் பின்னர் அவர்களை அச்சுறுத்த ஆரம்பித்துள்ளனர் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.